கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தான் நாங்களா? இனி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை –  சர்ச்சையை கிளப்பிய நாராயணசாமி

0
102
V. Narayanasamy
V. Narayanasamy

கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தான் நாங்களா? இனி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை –  சர்ச்சையை கிளப்பிய நாராயணசாமி

கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தான் நாங்களா இனி மதச்சார்பற்ற கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை என காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமானது 40 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி நடத்தினார். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம் பி, வைத்தியநாதன் எம் எல் ஏ மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ”பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் விற்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், மக்கள், மாணவர்கள் எப்படி வாழ்கின்றனர், மக்கள் பிரச்சினைகள் என்ன என்பதை புரிந்துகொண்டு மோடி அரசை தூக்கி எரியவே ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார் என்று பேசினார்.

மேலும் பேசிய அவர் அமைச்சர்கள் அனைவரும் பினாமி பெயரில் சொத்து வாங்கி வருகின்றனர். பணம் இல்லையென்றால் வேலை எதுவும் நடக்காது. இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு துறையாக சென்று அதில் நடக்கும் ஊழல்களையும், முறைக்கேடுகளையும் கண்டறிந்து மாதந்தோறும் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் போராட்டம் நடத்த வேண்டும். மற்ற கட்சிகள் வந்தாலும், வராவிட்டாலும் பராவாயில்லை. எப்போதும் மதசார்பற்ற கூட்டணி என்றாலே காங்கிரஸ் தலைமையில் தான் இருக்கும். கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் மட்டும் நாம் இல்லை. ஒவ்வொரு துறையாக சென்று போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் திமுக  கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் தற்போது சர்ச்சையை கிளப்பும் வகையில்  புதுச்சேரியில் கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை என்று கூறியுள்ளது  அவர்களது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.