கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு எதனால் ஏற்படுகிறது? பாதுகாத்துக் கொள்வது எப்படி?

0
89
Black Fungus
Black Fungus

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு, எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?: பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கொவிட்-19 பாதிப்புகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில் மட்டுமே கருப்பு பூஞ்சை எனப்படும் மியுகோர்மைகோஸிஸ் தொற்று பரவல் உள்ளதாக இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார். ‘கொவிட்-19 தொடர்புடைய மியுகோர்மைகோஸிஸ் மற்றும் வாய் சுகாதாரம்’ எனும் தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நீதா ராணாவும் இதில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பேசியதிலிருந்து சில முக்கிய அறிவுரைகள் மற்றும் கருத்துக்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

கருப்பு பூஞ்சை பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?

கொவிட்-19 பாதிப்போடு நீரிழிவு நோய் மற்றும் ஸ்டீராய்டுகளின் பயன்பாடு கலக்கும் போது நோய் எதிர்ப்பு தன்மை பெரியளவு பாதிப்புக்குள்ளாகிறது என்று கூறிய டாக்டர் ஜெயதேவன், நீரிழிவுக்கும் கருப்பு பூஞ்சைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

நமது நாட்டில் பலருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. எனவே அவர்களில் சிலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார். பெருந்தொற்றின் போது பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ள டாக்டர் ஜெயதேவன், அவரைப் பொருத்தவரை, கொவிட்-19 பாதிப்புகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில் மட்டுமே மியுகோர்மைகோஸிஸ் பாதிப்புகள் உள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர், “நீரிழிவு உள்ளவர்கள் அல்லது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அதிக அளவில் கருப்பு பூஞ்சையால்  பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய பாதிப்புகள் இல்லாதவர்களிடையே ஏற்படும் கருப்பு பூஞ்சை தொற்று குறித்து நாம் ஆராய வேண்டும்,” என்றார்

நீரிழிவு மற்றும் மியுகோர்மைகோஸிஸ்:

“நீரிழிவு நோயாளிகளின் ரத்த குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும்போது அவர்களது நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாது. நீரிழிவு நோய் தீவிரமாகும் போது நோயை எதிர்த்து போராடும் செல்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படலாம்,” என்று டாக்டர் ஜெயதேவன் கூறினார்.

நமது ரத்த செல்களை பூஞ்சை ஆக்கிரமிக்கும் போது திசுக்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் கிடைக்காமல் இறக்கின்றன. அவ்வாறு ஏற்படும் போது அவை கருப்பு நிறமாக மாறுகின்றன. இதன் காரணமாகவே இந்த பாதிப்பு கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

வாய் சுகாதாரமும் மியுகோர்மைகோஸிசும்:

கருத்தரங்கில் பேசிய பல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நீதா ராணா, “நல்ல வாய் சுகாதாரம் மற்றும் கொரோனா பாதிப்புக்கு இடையே கட்டாயமாக தொடர்பு உள்ளது. பற்கள் மற்றும் ஈறுகள் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குறைந்த அளவிலேயே வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு இல்லையேல் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன,” என்றார்.

தடுப்பு மருந்தும் மியுகோர்மைகோஸிசும்:

தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரும் உங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அதன் அளவு பெரும்பாலானவர்களில் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று டாக்டர் ஜெயதேவன் கூறினார். லேசான கொவிட் பாதிப்புகளுக்கு மருந்துகள் தேவையில்லை என்றும், எனவே ஸ்டீராய்டு மூலமாக உருவாகும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் கூறினார்.

லேசான கொரோனா பாதிப்பை, தானாகவே குணமடைய விடாமல் மருந்துகளை ஒருவர் தேவையில்லாமல் சுயமாக எடுத்துக் கொண்டாரேயானால், பூஞ்சை பாதிப்புக்கான அடித்தளத்தை அவர் ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் மேலும் தெரிவித்தார்

கொவிட்டுக்கு பிந்தைய மியுகோர்மைகோஸிஸ்:

கொவிட் சிகிச்சையின் தாக்கம் உடலில் சிறிது காலம் இருக்கும் என்பதால் சில வாரங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களது உடலை எந்த விதமான சாகசத்துக்கும் உட்படுத்த வேண்டாம் என்று டாக்டர் ஜெயதேவன் கூறினார். நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக உள்ள நபர்களுக்கு ஏற்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து பேசிய அவர், “நமது உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியாவால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உடலைக் காக்கிறது. நீண்ட காலத்திற்கு மற்றும் தேவையின்றி ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்துவது பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுகளுக்கு வழிவகுக்கும்,” என்றார். நமது நாட்டில் உள்ள நிறைய பேர் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்வதாக கூறிய அவர், மருத்துவர் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சுற்றுப்புறங்களின் மூலமாக கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுமா?

நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் பூஞ்சை இருக்கிறது. எனவே, வெளியில் அடி எடுத்து வைத்தால் பூஞ்சை பாதிப்பு வந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டாம். கருப்பு பூஞ்சை என்பது வெகு சிலருக்கே ஏற்படும் மிகவும் அரிதான பாதிப்பாகும் என்று டாக்டர் ஜெயதேவன் கூறினார்.

பெருந்தொற்றின் போது வாய் சுகாதாரம்:

“உங்கள் பல் மருத்துவருடன் தொடர்பில் இருங்கள். தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்தாலே பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாகும். பல் மருத்துவமனைகளில் வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். மருத்துவமனைக்கு நேரில் செல்ல வேண்டுமென்றால்  மருத்துவரின் அறிவுரையை பின்பற்றவும்,” என்று டாக்டர் நீத்தா கூறினார்.

கொவிட்டுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை எத்தனை காலத்திற்கு தடுப்பு மருந்து வழங்கும்?

தடுப்பு மருந்து மூலம் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலத்திற்கு நமது உடலில் இருக்கும் என்று நிறைய விஞ்ஞானிகள் நம்புவதாக டாக்டர் ஜெயதேவன் கூறினார். நோய் தீவிரம் அடைவது மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றிலிருந்து தடுப்பு மருந்து பாதுகாப்பதாக அவர் தெரிவித்தார்.

கொவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான அறிவுரை:

“பாதிப்பை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதே சமயம் அச்சப்படவும் தேவையில்லை. 5 அல்லது 6 நாட்களுக்கு பிறகு  அறிகுறிகள் தீவிரமானாலோ, அல்லது உங்களுக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உணவு உண்ண முடியாமல் இருந்தாலோ, அல்லது நெஞ்சுவலி ஏற்பட்டு அசவுகரியமாக உணர்ந்தாலோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்க்கவும். அல்லது தொலை மருத்துவ வசதியின் மூலமும் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்,” என்று டாக்டர் ஜெயதேவன் கூறினார்.