திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர்!

0
123

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த நிலையில், தற்போது விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திமுகவை கண்டித்து போராட்டத்தில் இறங்கி இருக்கின்றார்.சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் இருந்து பிரிந்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டு சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி விழுப்புரம் நகரில் இருந்த பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தில் தற்காலிகமாக அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்பதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்று அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து இருந்தார்கள். இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. இந்த நிலையில், திமுக அரசு இந்த பல்கலைக் கழகத்தை முடக்குவதற்கு முயற்சி செய்வதாக அதிமுக சார்பாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குவதற்கு நினைக்கும் மாநில அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போராட்டம் நடத்தி வருகின்றார். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் பொது மக்களும் பங்கேற்று இருக்கிறார்கள் போராட்டத்தின் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அரசியல் லாபத்திற்காக டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குவதற்கு திமுக அரசு முயற்சி செய்து வருகிறது.

திமுக அமைச்சர் பொன்முடி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார். டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் வந்தால் பொன்முடிக்கு நஷ்டம் உண்டாகும் என்ற காரணத்தால். இதனை முடக்குவதற்கு அவர் முயற்சி செய்கிறார் என்று சிவி சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கின்றார்.