டாஸ்மாக் செயல்பாட்டு நேரத்தை குறைக்க முடியுமா? உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

0
140

பொதுநலன் கருதி டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மதியம் இரண்டு மணி முதல் இரவு 8 மணி வரையில் குறைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் விவரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.

மதுவின் தீமைகள் தொடர்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தமிழில் விலை பட்டியல் வைக்க வேண்டும், புகார் செய்ய வசதி செய்து தர வேண்டும்.

என திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்யன் கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த மனதில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாவது, மதுவின் பெயர், அவற்றில் கலந்துள்ள பொருட்கள், தயாரிப்பாளர் விவரங்கள், மது பாட்டிலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகள், பார்கள் உள்ளிட்டவை மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரையில் மட்டுமே செயல்படுவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல மதுரை ரமேஷ் என்பவர் 21 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே மது அருந்தும் வகையில் உரிமம் வழங்கும் நடைமுறையை கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் ஆர். மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் சொல்லிட்டோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த வழக்குகளை விசாரித்தது. திருச்செந்தூரில் ஒரு பள்ளி அருகே 2019 ஆம் ஆண்டில் இருந்த டாஸ்மாக் கடையில் பல மாணவர்கள் மது அருந்துவது போன்ற புகைப்படத்தை ராம்குமார் ஆதித்யன் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

தமிழக அரசு தரப்பு இன்று சம்பவத்தை தொடர்ந்து திருச்செந்தூரில் ஒரு பள்ளி ஐடிஐ அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் 2019ல் அகற்றப்பட்டன என்று தெரிவித்தது.

நீதிபதிகள், பொதுநலன் கருதி டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையில் குறைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் விவரம் பெற்று அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தெரிவிக்க வேண்டும். மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.