தஞ்சை அருகே நடந்த தேர் விபத்து 11 பேர் பலி! விபத்தின் காரணமென்ன?

0
83

தஞ்சை அருகேவுள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் என்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் மடம் உண்டாக்கப்பட்டது.

அந்த அப்பர் சுவாமிகள் இங்கே ஓய்வெடுத்து சென்றதன் நினைவாக இந்த மடம் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த மடத்தில் வருடம்தோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா 3 நாட்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படும் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இந்த வருடத்திற்கான 94வது ஆண்டு அப்பர் விழா நேற்றுமுன்தினம் காலை ஆரம்பமானது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு11 மணியளவில் தேர் புறப்பாடு நடந்ததாக சொல்லப்படுகிறது.

வருடந்தோறும் மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா என்பதால் இந்த நிகழ்ச்சியில் களிமேடு கிராமத்தினர் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றவர்கள்.

20 அடி உயரத்திற்கு மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரில் அப்பர் படம் சிலையை உள்ளிட்டவற்றை வைத்து பொதுமக்கள் இழுத்துச் சென்றார்கள். தேரின் பின் பகுதியில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு அதன் மூலமாக தேருக்கு மின்சார வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த கிராமத்திலிருக்கின்ற வீதிகளில் தேர் வலம் வந்து கொண்டிருந்தது தேரில் பூசாரி மற்றும் சிறுவர்கள் உட்பட சிலர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் தேர் கீழத்தெரு பகுதிக்குச் சென்றது. அந்த தெருவிலுள்ளவர்கள் தேங்காய் உடைத்து வழிபட்ட உடன் பெயரை மறுபடியும் மடத்திற்கு கொண்டு செல்ல திருப்பினார்கள்.

அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் அங்கிருக்கும் அனைவரையும் உறைய வைக்கும் வகையில் அந்த துயர சம்பவம் நடந்தேறியது.

தேரை திருப்பியபோது பின்னால் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் எடை அதிகமாக இருந்ததால் தேரை சரியான நிலையில் திருப்ப முடியாமல் போனது இதன் காரணமாக, தேர் ஒருபுறமாக இழுக்கத்தொடங்கியது.

அந்த சமயத்தில் மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

உடனடியாக தேரில் அமர்ந்திருந்த பூசாரி உட்பட சிறுவர்கள் மற்றும் தேரை சுற்றியிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்ததால் அவற்றில் மின்சாரம் பாய்ந்து அங்கே நின்றவர்களும் சுருண்டு கீழே விழுந்தனர்.

இதன் காரணமாக, தூரத்தில் நின்றவர்கள் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் இதை கண்டவுடன் தீ மீது தண்ணீரை ஊற்றினர் இதனால் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் சரிந்து கீழே விழுந்தார்கள்.

அப்போது விபரீதத்தை உணர்ந்து கொண்ட பொதுமக்கள் தேரின் அருகே செல்லாமல் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்ததுடன் மின்சாரத்தையும் நிறுத்தினர்.

அதன் பிறகு தேரை விட்டு தூரத்தில் நின்றவர்கள் தேரில் அருகே சென்று பார்த்தார்கள், இதில் மின்சாரம் தாக்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து படுகாயமடைந்த எல்லோரும் அவசர ஊர்தி மூலமாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கே அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், சிகிச்சை வழங்கப்பட்டும் 13 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விபத்தில் மோகன் என்ற 22 வயது இளைஞன், முன்னாள் ராணுவ வீரர் ராகவன், அன்பழகன், செல்வம், ராஜ்குமார், சாமிநாதன், கோவிந்தராஜ், மணி, நாகராஜ், சந்தோஷ், உள்ளிட்ட 11 பேரும் பலியானார்கள்.

இந்த தீ விபத்து தொடர்பாக தகவலறிந்தவுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் விபத்து நடைபெற்ற களிமேடு கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

திருச்சி மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, காவல்துறை கண்காணிப்பாளர் ரவிபிரியா, உள்ளிட்டோரும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் களிமேடு பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதவாறு இருந்ததால் மருத்துவமனையில் வளாகமே ஒரே குரலாக ஒலித்தது.

பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் அவசர ஊர்தி மூலமாக களிமேடு கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 11 பேர் பலியான சம்பவத்தால் ஒட்டு மொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதற்கு நடுவே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், ஆறுதல் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலமாக வந்தடைந்தார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலமாக திருச்சி மார்க்கமாக களிமேடு கிராமத்திற்கு சென்றார்.

அங்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் பலியானோரில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பலியானவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து பலியானோரின் குடும்பத்தினருக்கு சட்டசபையில் அறிவித்ததனடிப்படையில் 5 லட்சத்துக்கான நிவாரண உதவித் தொகையை வழங்கினார்.

அதன்பிறகு தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த தேரை பார்வையிட்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு திமுகவின் சார்பாக தனியாக 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து காயமடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு அரசின் சார்பாக 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், திமுக சார்பாக காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும், நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார் என்று சொல்லப்படுகிறது.