தடுப்பூசி செலுத்திய செவிலியரை கிண்டல் செய்த பிரதமர்! கலகலப்பான எய்ம்ஸ் மருத்துவமனை!

0
81

இன்று முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி கோவாக்ஸின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா என்ற நர்ஸ் பிரதமருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி இருக்கின்றார்.

பிரதமருக்கு தடுப்பூசி போடப்பட்டது தொடர்பாக அந்த நர்ஸ் நிவேதா தெரிவிக்கும் போது, நான் பாண்டிச்சேரியில் இருந்து வந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றேன். இன்று என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான நாள் மோடி அவர்களை நேரில் பார்த்தேன் அவருக்கு தடுப்பூசி போடுவதற்காக என்னை அழைத்திருந்தார்கள். பிரதமருக்கு கோவாக்சின் முதல் டோசை செலுத்தி இருக்கின்றோம். 28 தினங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

பிரதமர் உள்ளே வந்தவுடனேயே எங்கிருந்து வருகிறீர்கள் என்றெல்லாம் கேட்டார். என்னுடன் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலியர் இருந்தார். நான் புதுச்சேரி என்று தெரிவித்ததும் வணக்கம் என்று தமிழில் பேச முயற்சி செய்தார். பெரிய ஊசியாக எடுத்து வந்து இருக்கிறீர்களா? வெட்னரி மருத்துவமனையை பயன்படுத்தும் எடுத்து இருக்கிறீர்களா என்று கிண்டல் செய்தார் என்றும் தெரிவித்திருக்கிறார் அந்த செவிலியர்.

முதலில் அவர் கேட்டது எங்களுக்கு சரியாக விளங்கவில்லை. அந்த சமயத்தில் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் தோல் மிக அழுத்தமாக இருக்கும் பெரிய ஊசியாக எடுத்து வந்து போடுங்கள் என்று தெரிவித்தார் என்றும் தெரிவித்திருக்கிறார் அந்த செவிலியர்.

இதனைத்தொடர்ந்து சாதாரண ஊசிதான் என்று தெரிவித்து அவருக்கு தடுப்பூசி செலுத்தினோம். 30நிமிடம் கண்காணிப்பில் இருந்தார் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை நான் ஊசி போட்டது கூட அவருக்கு தெரியவில்லை வலியே இல்லை என்று தெரிவித்தார்.

எல்லோரும் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக பிரதமர் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டிருக்கிறார் என இன்றைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் அந்த செவிலியர் நிவேதா.