குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

0
66
Covaxin
Covaxin

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

கொரோனா வைரஸ் மூன்றாம் அலை சில நாடுகளில் தாக்கி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்வதறியாது தவித்து வருகின்றன.

அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு என முதல் கட்டமாகவும், 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிய நிலையில், தற்போது மூன்றாம் கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால், உயிரிழப்பு குறைக்கப்படுவதாக ஆதாரப்பூர்வமாக பல்வேறு நாடுகள் கூறிவரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மூன்றாம் அலை பாதிப்பு குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என எச்சரிக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய தயாரிப்பான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு செலுத்தி மருத்துவ ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

525 தன்னார்வ சிறுவர்களுக்கு இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்படும் என தெரிவத்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், டெல்லி, பாட்னா, நாக்பூரில் ஆய்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. 2 மற்றும் 3ம் மருத்துவ ஆய்வுகள் முடிய ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்.

இதில், ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்ததும் நாடு முழுவதும் சிறுவர்களுக்கு  தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுகள் அதிகப்படுத்தி வரும் சூழலில், தடுப்பூசிகளை அதிகளவில் தயாரிக்க தேவையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.