ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி!

0
85

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி!

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ் பெற்றது. வெளிநாட்டினரும் இங்கு நடைபெறும் போட்டியைக் காண வருகை தருவார்கள்.

அலங்காநல்லூரை போன்று அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரசித்தி பெற்றது. பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி வருகிற 16ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், ஓர் இடத்தில் கலந்து கொண்டால் மற்றோர் இடத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும்  ஒவ்வொரு போட்டியிலும் தலா 700 மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாளான ஜனவரி 16ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,

வருகிற 16ஆம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனவரி 16ஆம் தேதிக்கு பதிலாக அதற்கு அடுத்த நாள் 17ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பவர்களுக்கான முன் பதிவு இன்று முதல் தொடங்குவதாகவும், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக  ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வெளியூர் மக்கள் யாரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தர வேண்டாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.

author avatar
Parthipan K