டெலிவரி ஊழியர் அந்தரங்க உறுப்பை கடித்த நாய்! அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி

0
100

டெலிவரி ஊழியர் அந்தரங்க உறுப்பை கடித்த நாய்! அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி

மும்பையில் டெலிவரி ஊழியர் ஒருவரை லிஃப்டில் வைத்து ஜெர்மன் ஷெப்பர்டு வகை வளர்ப்பு நாய் அவரது அந்தரங்க பகுதியில் கடித்துள்ளது. அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொது இடங்களில் தெரு நாய்களின் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது ஆனால் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களே பொதுமக்களுக்கு தொல்லையாக அமைந்துள்ளது அந்த வகையில் சமீபத்தில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த நபரை அருகிலுள்ளவர்களின் வளர்ப்பு நாய் கடித்து விட்டது. மேலும் சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுவன் லிஃப்டில் பயணம் செய்தபோது, அதே லிஃப்டில் பயணம் செய்த பெண் அழைத்து வந்த நாய் அந்த சிறுவனை லேசாக கடித்து விட்டது.இவ்வாறு ஆங்காங்கே பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

பொது வெளிகளில் நாம் இதுபோன்று நாயை எதிர்கொள்ளும்போது போதுமான இடைவெளி இருப்பதால் அதனிடம் இருந்து தப்பித்து  விலகிச் சென்று விடுகிறோம். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குறுகிய இடவசதியே இருப்பதால் லிஃப்டுகளில் செல்லும் போது கடிக்க வரும் நாயிடம் இருந்து விலகுவதற்கான சாத்தியங்கள் எதுவும் இருப்பதில்லை.

அந்தவகையில் தான் டெலிவரி ஊழியர் ஒருவரை அவரின் அந்தரங்க பகுதியை நாய் கடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.கடந்த மாதம் 29 ஆம் தேதி பான்வல் பகுதியில் உள்ள இந்தியாபுல்ஸ் க்ரீன்ஸ் மேரிகோல்டு பகுதியில் இந்த நிகழ்வானது நடைபெற்றுள்ளது. சொமேட்டோ நிறுவன டெலிவரி ஊழியர் ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்டில் ஏறுகிறார்.

அப்போது லிஃப்ட் உள்ளே ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயுடன் ஒரு நபர் நின்று கொண்டிருக்கிறார். அப்போது டெலிவரி ஊழியரை பார்த்து அந்த நாய் சீறும்போது உரிமையாளர் அதன் கயிற்றை இழுத்தவுடன் முதலில் பின் வாங்குகிறது. இதனால், பயத்தில் பின்னோக்கி சென்ற அந்த ஊழியர் பின்னர் பயத்தை விட்டு மீண்டும் லிஃப்ட் உள்ளே செல்கிறார். அப்போது மீண்டும் அவர் மீது பாய்ந்த அந்த நாய் ஊழியரின் அந்தரங்க பகுதியில் கடித்துவிட்டது.

இவ்வாறு அந்தரங்க பகுதியில் நாய் கடித்து ரத்தம் சொட்ட, சொட்ட அந்த நபர் வலியா துடிக்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சிறிய மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற அவருக்கு அங்கு குணமாகாத நிலையில், தற்போது ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் இவரது மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அந்த நாயின் உரிமையாளர் ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.