அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர்! மருத்துவர் ராமதாஸ் எழுதிய அதிரடி கடிதம்

0
78
PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil
PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தமிழ்நாட்டின் திறமையான ஆட்சியாளரை ஊடகங்கள் அடையாளம் காட்ட   வேண்டும் என்றும் பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர் என்று ஊடகங்கள் முன்மொழிய வேண்டும் என்றும் ஊடகத்துறையினருக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கு தகுதியான முதலமைச்சர் வேட்பாளரை திறமைகளின் அடிப்படையில் ஊடகங்கள் தான் அடையாளம் காட்ட வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். திறமையான ஆட்சியாளரை அடையாளம் காண்பதற்காக, முதலமைச்சர் பதவிக்கு தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் அனைத்து தலைவர்களையும் அழைத்து தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பொது விவாதம் நடத்த ஊடகங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அன்பிற்கினிய ஊடகத்துறை நண்பர்களுக்கு…

வணக்கம்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுக்கு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி. ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதும் ஒரே தலைவர் நானாகத் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மட்டுமல்ல… ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஊடகங்களுக்கு கடிதம் எழுதும் தலைவர்  நானாகத் தான் இருப்பேன். ஊடகங்களுடன் தான் எங்களின் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான நான், கூட்டணித் தோழர்களுக்கு கடிதம் எழுதுவது இயல்பானது தானே.

இவற்றையெல்லாம் கடந்து நமக்குள் இன்னொரு பந்தமும் உள்ளது. நானும் உங்களில் ஒருவன் தான். நானும் ஒரு பத்திரிகையாளன் தான். தொடக்கத்தில் ‘கனல்’ என்ற வார இதழையும், ‘தினப்புரட்சி’ என்ற நாளிதழையும் நிறுவி நடத்தியவன். தமிழ் ஓசை என்ற பெயரில் நான் தொடங்கி நடத்திய நாளிதழ் முன்னோடி இதழாக திகழ்ந்தது. செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்கள் தொலைக்காட்சியும் என்னால் தொடங்கப்பட்டது தான் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

எந்தவிதமான அரச பதவிகளையும் ஏற்கப் போவதில்லை. சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ ஒருநாளும் எனது காலடித்தடம் படியாது என்று சபதம் ஏற்றது மட்டுமின்றி, அதை உறுதியாக கடைபிடித்து வருகிறேன். எந்த சமரசமுமின்றி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

கொரோனா வைரஸ் நோய்  பரவலால் ஏற்பட்ட விளைவுகள் ஊடகங்களின் செயல்பாடுகளையும் பல்வேறு வழிகளில் பாதித்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஊடகங்களும், ஊடகத் துறை நண்பர்களும் இப்போது ஏற்பட்டிருக்கும் அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் மீண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன்; நிச்சயமாக ஊடகங்கள் நெருக்கடியிலிருந்து மீண்டு  எழும். இந்நெருக்கடியான காலத்தில் ஊடகங்களின் பக்கம் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நிற்கிறது.

அதேபோல், தமிழ்நாட்டை அதன் பின்னடைவுகளில் இருந்து மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதையில்  முன்னெடுத்துச் செல்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பயணத்தில் ஊடகங்கள் உறுதியாக துணை நிற்க வேண்டும் என்று வேண்டுகிறேன். தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான எங்களின் முன்னெடுப்புகள் ஊடகங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாமல் சாத்தியமாகாது என்பதை மிகவும் நன்றாக உணர்ந்திருக்கிறேன்.

ஊடகங்களின் ஆதரவைத் கோருவதற்கு எனக்கு அனைத்து வகைகளிலும் உரிமை உள்ளது. காரணம்…. அடிப்படையில் நான் ஊடகங்களின் தோழன். வன்னியர் சங்க காலமாக இருந்தாலும் சரி… பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பிறகாக இருந்தாலும் சரி… தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு நான் செல்லும் போதெல்லாம் எனது முதல் நிகழ்ச்சி பத்திரிகையாளர்களுடனான சந்திப்பாகத் தான் இருக்கும். என்னிடம் எழுப்பப்படும் அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பேன். போராட்ட காலங்களிலும், அரசியல் பயணத்திலும் எனக்கு நல்ல ஆலோசகர்களாகவும்,  உற்ற துணையாகவும் இருந்தவர்கள் ஊடகவியாளர்கள்… ஊடகவியலாளர்கள்… ஊடகவியலாளர்கள் தான்!

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு மாநாட்டில்,‘‘2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஊடகங்களுடன் தான் பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது’’ என்று அறிவித்தேன். நான் அடிப்படையில் அரசியல்வாதி அல்ல என்பதால், என் மீதான நிறை, குறைகள் குறித்த விமர்சனங்களை வரவேற்பவன். நான் சந்திக்கும் செய்தியாளர்கள் அனைவரிடமுமே என் மீதான குறைகளை என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவியுங்கள் என்று கூறி எனது தொலைபேசி எண்ணை பத்திரிகையாளர்களிடம் வழங்கியுள்ளேன்.

செய்தியாளர்களிடம் எப்போதும் நல்லுறவை பராமரித்து வந்திருக்கிறேன். ஒரே ஒரு முறை மட்டும், துரதிருஷ்டவசமாக,  தி டெலிகிராப் செய்தியாளர் ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் பற்றி மீண்டும், மீண்டும் குதர்க்கமாக வினா எழுப்பிய போது, சற்று கடுமையாக பதிலளித்து விட்டேன். மற்றபடி ஊடகத்துறையினருடனான எனது நட்பு நெருக்கமாகவும், விருப்பமாகவும் இருந்து வருகிறது. நான் இப்போதும் சொல்கிறேன், மிகவும் தெளிவாக சொல்கிறேன், என் மீதான, பா.ம.க. மீதான குறைகள் ஏதேனும் இருந்தால் எனது தொலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது சாத்தியமான வேறு வழிகளிலோ என்னை தொடர்பு கொண்டு ஊடகவியலாளர்கள் தெரிவிக்கலாம்.

உலகில் எந்த ஆட்சியாளருக்கும், ஆயுதத்துக்கும் இல்லாத சக்தி ஊடகங்களுக்கு உண்டு. ஆயுதங்களாலும், அதிகார வலிமையாலும் கூட சாதிக்க முடியாத விஷயங்களை ஊடகங்களால் சாதிக்க முடியும். அதனால் தான் துப்பாக்கி முனையை விட பேனா முனை வலிமையானது. அதனால் தான் அனைவரும் ஊடகங்களுக்கு அஞ்சுகின்றனர். ஊடகங்கள் எனப்படுபவை எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை நடுநிலை என்பதே நல்லவர்களின் பக்கம் நிற்பது தான். ஊடகங்களுக்கும் இது பொருந்தும்.

பாட்டாளி மக்கள் கட்சி என்பது நல்ல கட்சி என்பது மட்டுமின்றி, மக்களுக்கான திட்டங்களை வகுப்பதில் சிறப்பாக செயல்படும் கட்சியும் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்த போது படைத்த சாதனைகள் ஏராளம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

2004-09 மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து 13 பேர் மத்திய அமைச்சர்களாக  இருந்தார்கள். அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அமைச்சர்களின் தரவரிசையை லயோலா கல்லூரி வெளியிட்டது. அந்தப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தவர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவார்.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இரண்டாவது இடத்தை பிடித்தார்.  பா.ம.கவைச் சேர்ந்த தொடர்வண்டித்துறை இணையமைச்சர் அரங்க. வேலு மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார். அதாவது தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 13 அமைச்சர்களில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த அமைச்சர்களில் இருவர் பா.ம.க.வினர் ஆவர்.

இந்தியாவில் புகையிலைப் பயன்பாட்டை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் சார்பில் உலகப்புகழ் பெற்ற லூதர் எல்.டெர்ரி விருது (Luther L. Terry Award) கடந்த 2006&ஆம் ஆண்டில் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு வழங்கப்பட்டது. இது தவிர புகையிலை கட்டுப்பாட்டு பணிகளுக்காக உலக நலவாழ்வு நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது-2007(World Health Organization Director General’s Special Award for tobacco control-2007), சிறந்த தலைமைப் பண்புக்கான உலக நலவாழ்வு நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது (World Health Organization Director General’s Special Award for Leadership), சர்வதேச ரோட்டரி சங்கத்தின் போலியோ ஒழிப்பு சாதனையாளர் விருது (Rotary International awarded Polio Eradication Champion Award  )ஆகிய நான்கு பன்னாட்டு விருதுகளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வென்றிருக்கிறார். இந்தியாவில் இந்த சாதனையை வேறு எவரும் படைக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளராக இருப்பவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் ஆட்சித் தலைவரை மட்டும் தான் நேரில் சென்று சந்திப்பது வழக்கம். மற்ற அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் அவரைத் தான் தேடிச் சென்று சந்திக்க வேண்டும். ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இருந்த போது, இந்தியா வந்த அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், அன்புமணியை அவரது அலுவலகத்துக்கு  தேடிச் சென்று சந்தித்தார். அதுமட்டுமின்றி,‘‘ உலகின் பல நாடுகளுக்கு நான் சென்றிருந்தாலும், சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவரை அவரது அலுவலகத்திற்கு தேடிச் சென்று சந்திப்பது இதுவே  முதல்முறையாகும். சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கொண்டுள்ள உறுதிப்பாடு தான் என்னை இங்கு வரவழைத்தது’’ என்று கூறி மருத்துவர் அன்புமணியை பெருமைப்படுத்தினார்.

Anbumani Ramadoss News4 Tamil Latest Online Tamil News Today
Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

சுகாதாரத்துறையில் கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை 5 ஆண்டுகளில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் செய்து முடித்துள்ளார் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஒரு நடமாடும் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவர்களும் பாராட்டி கவுரவித்தனர்.

தமிழ்நாட்டிற்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்த மருத்துவர் அன்புமணி.  மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15 விழுக்காடும், பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கியவரும் அன்புமணி இராமதாஸ் தான். டாக்டர் அம்பேத்கருக்கு அடுத்தபடியாக தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் என அந்த சமுதாயத் தலைவர்களால் பாராட்டப்பட்டவர். கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நீர்மேலாண்மை, சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாதல், தொழில் வளர்ச்சி, பொருளாதாரம்  உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்படும் 108 அவசர ஊர்தி திட்டத்தை கொண்டு வந்தவர். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் (National Rural Health Mission – NRHM) தொடங்கி, வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர் என பா.ம.க.வின் தேர்தல் முகமான மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக இருந்த அரங்க. வேலு, ஏ.கே.மூர்த்தி ஆகிய இருவரும் தமிழ்நாட்டிற்கு சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்தவர்கள்.  முறையே பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் வாஜ்பாய் ஆகியோரால் பாராட்டப்பட்டவர்கள். மூர்த்தியின் பணிகளைப் பற்றி அறிந்திருந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய், தமது சொந்தத் தொகுதியான லக்னோவில் உள்ள தொடர்வண்டி நிலையம் காலம் காலமாக அசுத்தமாக, பார்க்க சகிக்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும், அதை அழகுபடுத்தித் தரும்படியும் கேட்டுக்கொண்டனர். அப்பணியை சிறப்பாக செய்து முடித்ததற்காக அவரை தமது இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்து கவுரவித்தார்.

அரங்க. வேலு தொடர்வண்டி இணை அமைச்சராக பதவியேற்ற போது, அத்துறைக்கு ரூ.61,000 கோடி கடன் சுமை இருந்தது. அதுமட்டுமின்றி அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பல்லாயிரம் கோடி இருந்தது. அவை அனைத்தையும் செலுத்திய பிறகு 2009-ஆம் ஆண்டில் பா.ம.க. அமைச்சர் வேலு பதவி விலகிய போது இந்தியத் தொடர்வண்டித் துறையிடம் ரூ.89,000 கோடி உபரி நிதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவையும் கடந்து இந்திய வரலாற்றில் முதன்முறையாக அவரது காலத்தில் தான் தொடர்வண்டிக் கட்டணம் குறைக்கப்பட்டது;  இதுவரை அச்சாதனை முறியடிக்கப்படவில்லை. இத்தகைய சிறப்பான நிர்வாகிகளைக் கொண்ட இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி ஆகும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல…. ஒட்டுமொத்த இந்தியாவிலும் மக்கள் நலனுக்காகவும், ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டுவதற்காகவும் 2003-04 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 18 ஆண்டுகளாக பொது நிழல்நிதிநிலை அறிக்கைகளையும், 2008-09 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 13 ஆண்டுகளாக வேளாண் நிழல்நிதிநிலை அறிக்கைகளையும் வெளியிட்டு வரும் ஒரே அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அதுமட்டுமின்றி, ‘தமிழ்நாட்டிற்கான மாற்று மதுவிலக்குக் கொள்கை’, ‘தொழில்துறைக்கான  பயனுள்ள மாற்றுத் திட்டம்’, ‘வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பயனுள்ள மாற்றுத்திட்டம்’,  ‘இளைஞர்களின் மறுமலர்ச்சிக்கான பயனுள்ள அணுகுமுறை’, ‘2020-ஆம் ஆண்டில் தமிழகம் – ஒரு தொலைநோக்குத் திட்டம்’, ‘சென்னை மாநகருக்கான மாற்றுப் போக்குவரத்துத் திட்டம்’, ‘நாம் விரும்பும் சென்னை’ உள்ளிட்ட 45 ஆவணங்களை பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்து வழங்கியுள்ளது.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை மக்கள் ஆய்வுக்கு வைத்து, எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை  மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது? என்று தனியார் தொலைக்காட்சி ஒன்று வாக்கெடுப்பு நடத்தியது. அதில் 73 விழுக்காட்டினர் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை தான் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தனர். அதிமுக, திமுக உள்ளிட்ட மீதமுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்தே மொத்தம் 23% வாக்குகள் தான் கிடைத்திருந்தன. அந்த தேர்தல் அறிக்கையில் பட்டியலிடப்பட்டிருந்த திட்டங்கள் மட்டும் செயல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாறியிருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை, அறிவார்ந்த தலைமை என அனைத்திலும் சிறந்து விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டை ஆண்டால்,  அது தமிழ்நாட்டை எந்த அளவுக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லும் கடமை ஊடகங்களுக்கு உண்டு. தமிழ்நாட்டுக்கு எது நன்மை? என்பது குறித்து மக்களுக்கு பரிந்துரைக்க வேண்டியது ஊடகங்களின் கடமை. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஊடகங்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது தான் தமிழகத்திற்கு ஊடகங்கள் செய்யும் பெரும் நன்மையாக இருக்கும்.

உக்ரைன் நாட்டிலும், நியுசிலாந்திலும் ஊடகங்கள் இவ்வாறு செய்ததன் பயனாக அங்குள்ள மக்களுக்கு மிகச் சிறந்த ஆட்சிகள் கிடைத்திருக்கின்றன.

உக்ரைன் நாட்டின் தற்போதைய அதிபரான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட போது அவருக்கு வயது வெறும் 41 தான். அவருக்கு பெரிய அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. அவர் அரசியலுக்கு வந்ததே விபத்து தான். அவர் அடிப்படையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர். திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, 2015 ஆம் ஆண்டில் ‘Servant of People’ என்ற தொலைக்காட்சித் தொடரில் உக்ரைன் நாட்டு அதிபராக நடித்தார். அப்போது உக்ரைன் அதிபராக இருந்த பெட்ரோ பொராஷன்கோ மக்களை மதிக்காமல் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

தொலைக்காட்சித் தொடரில் நடித்த பிறகு மக்கள் நலனுக்கான பல திட்டங்களை அவர் முன் வைத்தார். தொடர்ந்து தேர்தலுக்கு ஓராண்டு முன்பாக 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான்  புதிய கட்சியைத் தொடங்கினார். அவரது கட்சியின் பெயர் வேடிக்கையானது. அக்கட்சியின் பெயர்…. ‘Servant of People’. ஆம்… தமக்கு புகழ்தேடி தந்த தொலைக்காட்சித் தொடரின் பெயரையே கட்சிக்கும் வைத்தார். உக்ரைன் நாட்டின் முன்னேற்றத்துக்கான செயல்திட்டங்களை  மக்கள் முன்வைத்த அவர், ஒருமுறை மட்டும் தான் அதிபராக இருப்பேன் என்று உறுதியளித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது சமூக ஊடகங்களை மட்டுமே பயன்படுத்திய அவர், ஊடகங்களை பிரச்சாரத்துக்கு அழைக்கவே இல்லை. ஆனாலும் அவரது கொள்கைகளும், செயல்திட்டங்களும்  சிறப்பாக இருந்ததால் ஊடகங்கள் அவரை அதிபராக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தன. அவரும் 73.22% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தமது செயல்திட்டங்களை சமரசமின்றி, செயல்படுத்தி வருவதால் உக்ரைனில் அவருக்கு செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதேபோல், நியுசிலாந்து நாட்டின் தற்போதைய பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் அந்தப் பதவியை கடந்த 2017-ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்ட போது அவருக்கு வயது 37 மட்டும் தான். சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ஜசிந்தா 2008-ஆம் ஆண்டில் தமது 28-ஆவது வயதில் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். நியூசிலாந்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2008,  2011, 2014 ஆகிய 3 தேர்தல்களிலும் தொழிலாளர் கட்சி படுதோல்வியடைந்ததால் அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்தவர்கள் அனைவரும் பதவி விலகி விட்டனர். 2017-ஆம் ஆண்டு தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்திச் சென்றவர் அன்னெட் கிங் என்ற பெண்மணி.

2017-ஆம் ஆண்டு தேர்தலிலும் தொழிலாளர் கட்சி படுதோல்வி அடையும், முந்தைய தேர்தலில் கிடைத்த வாக்குகள் கூட கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதனால் அச்சமடைந்த அன்னெட் கிங் தலைவர் பதவியிலிருந்து விலகினார். தலைவர் பதவியை ஏற்க எவரும் தயாராக இல்லாத நிலையில், புதிய தலைவராக ஜசிந்தா பொறுப்பேற்றார். அப்போது தேர்தலுக்கு 53 நாட்கள் மட்டும் தான் இருந்தன. அந்தக் கட்சிக்கு படுதோல்வி தான் பரிசு என  உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், துணிச்சலுடன் பொறுப்பை ஏற்ற ஜசிந்தா ஆர்டெர்ன், தமது செயல்திட்டத்தை அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்றே சமூக ஜனநாயகம் தான் தமது கொள்கை என்று அறிவித்த அவர், அனைவருக்கும் வீடு, குழந்தைப் பருவ வறுமை ஒழிப்பு, சமூக சமத்துவமின்மையை ஒழித்தல் ஆகியவை தான் தமது வாக்குறுதிகள் என்று அறிவித்தார்.

அவரது கொள்கைகளும், வாக்குறுதிகளும் அனைவரையும் கவர்ந்தன. அதனால் அனைத்து ஊடகங்களும் ஜசிந்தாவை போட்டிப் போட்டு ஆதரித்தன. அவரது கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளின் சிறப்புகளை ஊடகங்கள் பாராட்டி எழுதின. அதுவரை முகம் தெரியாதவராக  இருந்த ஜசிந்தா அனைவரும் அறிந்தவரானார். 23.09.2017&இல் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 120 இடங்களில் 46 இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார். உலகத்திலேயே இளம் வயதில் ஒரு நாட்டின் ஆட்சித் தலைவரானவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிரதமரான பின்னர் குழந்தை பெற்றுக் கொண்டு, அக்குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி ஐ.நா பொது அவைக் கூட்டங்களுக்கும் சென்று விவாதங்களில் இவர் கலந்து கொண்டது பரபரப்பு செய்தியானது. நியூசிலாந்தில் கொரோனாவை குறுகிய காலத்தில் ஒழித்தது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது, துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஒழித்தது என பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் வரும் செப்டம்பர் 19&ஆம் தேதி நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தலில் வென்று பதவியை தக்கவைத்துக் கொள்வார் என கணிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் எடுத்துக் கொண்டால், தில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் யாரென்று மக்களுக்குத் தெரியாது. ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி பெரியவர் அண்ணா ஹசாரே தில்லியில் நடத்திய சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவர் என்பது மட்டும் தான் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிந்த விஷயம். ஆனால், அவருக்கு திடமான ஆதரவு தந்ததவர்கள் நீங்கள் தான். மாற்றத்தை  ஏற்படுத்த அர்விந்த் கெஜ்ரிவாலால் முடியும் என்று அவருக்காக நீங்கள் தான் பிரச்சாரம் செய்தனர். உங்களின் பிரச்சாரத்தால் மட்டுமே கடந்த 7 ஆண்டுகளில் தில்லியில் 3 முறை ஆட்சியமைத்துள்ளார்.

உக்ரைனிலும், நியுசிலாந்திலும் , தில்லியிலும் படைக்கப்பட்ட வரலாறு தமிழகத்திலும் படைக்கப் படுவது ஊடகக் கூட்டாளிகளின் கைகளில் தான் உள்ளது. உக்ரைன், நியுசிலாந்து ஆகிய நாடுகளின் இப்போதைய தலைவர்களையும், தில்லி முதலமைச்சரையும் விட சிறப்பான கொள்கைகள்  மற்றும் செயல்திட்டங்களையும் பா.ம.கவும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் கொண்டிருக்கின்றனர்.

2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ், உக்ரைன் அதிபர் கேட்டதைப் போல, தமக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு வழங்கும்படி கூறினார். அப்போது அவரைத் திறமைகளின் அடிப்படையில் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என ஊடகங்கள் முன்மொழிந்திருக்க வேண்டும்.

இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டை காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது.  1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை 5 தேர்தல்களில் வெற்றி பெற்று 22 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அதிமுக 1977-ஆம் ஆண்டு முதல் இன்று வரை 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று 30-ஆவது ஆண்டாக ஆட்சிப் பொறுப்பில் தொடர்கிறது. அத்தனை ஆண்டுகால ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்டதை விட சிறப்பான திட்டங்களை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பொதுவெளியில் முன்வைத்த நிலையில், அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து பார்க்கலாம் என்று  மக்களுக்கு ஊடகங்கள் பரிந்துரைத்திருக்க வேண்டும். ஊடகங்களுக்கு அந்தக் கடமை உள்ளது.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை கருணை அடிப்படையிலோ, வேறு அடிப்படையிலோ மக்களிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. திறமையை பரிசோதித்துப் பார்த்து, அதில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டும் பரிந்துரை செய்தால் போதும். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர  வேண்டும் என்று நினைக்கும் அனைவரையும் அழைத்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும்,  மக்களின் நன்மைகளுக்காகவும் என்னென்ன செயல்திட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து விவாதம் நடத்த ஊடகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதை பலமுறை நான் கூறியுள்ளேன்.

ஊடகங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதத்தில் வெற்றி பெறும் வேட்பாளரை ஊடகத்துறையின் வேட்பாளராக முன்னிறுத்தலாம். அப்படி செய்தால் அது உலக அளவில் முன்மாதிரியாக இருக்கும். அப்படி செய்தால் தமிழகத்திற்கு நல்ல தலைமையும், தமிழ்நாட்டு மக்களுக்கு உலகம் போற்றும் நல்லாட்சியும் கிடைக்கும். இதை ஊடகங்கள் கண்டிப்பாக செய்யும் என்று நம்புகிறேன்; நம்புகிறேன். இது குறித்தும் ஊடகவியலாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம்” என்றும் மருத்துவர் ராமதாஸ் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

author avatar
Ammasi Manickam