சசிகலா தொடர்பான விமர்சனம்! எதிர்க்கட்சித் தலைவருக்கு மறைமுக கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ்!

0
63

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுகவை எப்படியேனும் தன்வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

அந்த விதத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார். ஆனால் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை அவர் செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு டிடிவி தினகரன் அவ்வபோது அதிமுகவில் எங்களுடைய ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள் எங்களை மீறி எதுவும் செய்துவிட முடியாது என்பது உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய உள்துறை உள்துறை அமைச்சருமான அமித் ஷா அவர்களை சந்தித்து பேசும்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவை அதிமுகவில் இணைத்து விடலாம் என்பது போன்ற கருத்தை அவரிடம் முன்வைத்தார்.

இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும், எந்தவிதமான சம்பந்தமும் இல்லை அவர் அதிமுகவில் இனி இணைய மாட்டார் என்று கடுமையாக தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், சசிகலாவின் விவகாரத்தில் அதிமுகவில் மறுபடியும் வெளிப்படையான கருத்து வேறுபாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பன்னீர்செல்வம் அவர்களுக்கும், இடையே நடந்திருப்பதாக சொல்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்து விட்டு பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் என சசிகலா தன்னை குறிப்பிட்டு கொள்வது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல ஒரு சிலர் ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் அதற்கெல்லாம் நாங்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

சசிகலாவை மிகவும் கீழ்த்தரமான விதத்தில் விமர்சனம் செய்து இருந்ததாக அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மதுரையில் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, என பேரறிஞர் அண்ணா முன்னெடுத்த கொள்கைகளை தான் அதிமுகவின் கொள்கைகளாக முறையாக கடைபிடித்து வருகிறோம். அரசியல் இயக்கத்திற்கு தலைமை தாங்கி உள்ளவர்கள் மற்றவர்களை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் சமயத்தில் கண்ணியத்துடன் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் தொண்டனாக இருந்தாலும் சரி, உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைவராக இருந்தாலும் சரி, யாரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பது அறிஞர் அண்ணா கற்றுத்தந்த கொள்கை என தெரிவித்திருந்தார் பன்னீர்செல்வம்.

சசிகலா மீதான எடப்பாடி பழனிச்சாமியின் இதுபோன்ற விமர்சனத்திற்கு பன்னீர்செல்வம் கொடுத்த பதிலடி ஆகவே அவருடைய இந்த பதில் பார்க்கப்படுகின்றது.சசிகலா ஆதரவு தொலைக்காட்சி ஆக இருக்கும் ஜெயா தொலைக்காட்சியில் பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து தொடர்பாக விவாதம் நடத்தும் அளவிற்கு பன்னீர்செல்வத்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.