ஒரே நேரத்தில் இவர் இங்கே அவர் அங்கே! தெரிந்துதான் செய்தார்களா?

0
93

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்னும் ஒருசில தினங்களில் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுற இருக்கிறது.தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் காட்டுத்தீயை போல நடந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தேர்தல் பரப்புரை தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கும் திட்டங்கள் யாவும் தமிழக மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது. என்ன தான் அதிமுக அறிவித்திருக்கும் அனைத்து திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்தி விட முடியாது, அப்படியே செயல்படுத்தினாலும் அரசு கடனாளியாக நிற்கவேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தாலும் கூட அதனை நிச்சயமாக நான் செய்து காட்டுவேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலும் எந்த ஒரு வார்த்தையிலும் மக்களைத் துன்புறுத்தும் விதமாகவோ, அல்லது அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக அல்லது அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் விதமாக எந்த ஒரு வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய சிறப்பம்சமாக விளங்கிவருகிறது.
அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கையில் சிறப்பம்சமே அந்த கட்சியின் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலிக்கிறது. இதனால் தமிழக மக்கள் எல்லோரும் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதற்கு தயாராகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மறுபுறம் எதிர்கட்சியான திமுக பல வாக்குறுதிகளை அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்தாலும், ஒருசில வாக்குறுதிகள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது .அதில் குறிப்பிடத்தக்கவை கலப்புத் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூபாய் 60,000 நிதி கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஏற்கனவே தமிழகத்தில் ஒரு சிலர் காதல் என்ற பெயரில் நாடக காதல் மூலமாக பள்ளிக்குச் செல்லும் பெண்களை நயமாக பேசி அவர்களை தன்வசப்படுத்தி திருமணம் செய்துகொண்டு பின்பு அவர்களின் வாழ்க்கையை வீணாக்கி மறுபடியும் பெற்றோர்களிடம் அனுப்பி வைக்கும் அவலம் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அதோடு தான் காதலிக்கும் பெண் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணை அவமரியாதை செய்வது, ஆசிட் அடிப்பது போன்ற விரும்பத்தகாத செயல்களும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு பயந்தே பல பெண்கள் தெரிந்தே தங்களுடைய வாழ்க்கையை வீண் ஆக்கிக் கொள்கிறார்கள். இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து பெற்றோர்களும் எப்போது என்ன நடக்குமோ என்ற பரிதவிப்பில் இருந்து வருகிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எதிர்க் கட்சியான திமுக சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் இவ்வாறு அந்த நாடக காதல் செய்யும் கும்பலுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை கொடுத்திருப்பது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிலும் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறார்கள். எப்பொழுதும் சாதி மறுப்பு கொள்கையை முழுமையாக பின்பற்றுகிறேன் என்று சொல்லிக்கொள்ளும் திருமாவளவன் அவருடைய தேர்தல் அறிக்கையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தனிப்படை அமைத்து பாதுகாப்பு வழங்கப்படும் என்று திமுகவை விட ஒரு படி மேல் சென்று ஒரு அறிக்கையை விட்டு இருக்கிறார் இதனால் தமிழகத்தில் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் மிகுந்த பயத்தில் இருந்து வருகிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை என்ற இரண்டும் வெளிவந்த பிறகு அதனை கண்ட பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் இனி நம் பிள்ளைகளின் பாதுகாப்பு என்னாகும்? நம்முடைய பிள்ளைகள் வெளியே சென்று எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வீடு வந்து சேர்வார்களா என்று மிகுந்த பயத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.முன்பெல்லாம் அவர்கள் வாங்கும் ஓட்டுக்காக சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் இப்படி எதையாவது ஒன்றை சொல்லி வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்வார்கள் ஆனால் தற்சமயம் சில சமூக விரோத கும்பலுக்கு ஆதரவாக இப்படி ஒரு தேர்தல் அறிக்கை விட்டிருப்பது திமுகவின் முகத்திரையை தமிழக மக்களிடையே கிழித்தெறிந்து இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழகத்தில் இருக்கின்ற பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரே குரலாக அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று குரல் எழுப்ப தொடங்கிவிட்டார்கள். இதனால் திமுக சற்றே அதிர்ந்து போய் இருப்பதாக சொல்கிறார்கள்.ஜாதியை ஒழித்து விடுகிறேன் என்ற பெயரில் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு சட்டப்படி அனுமதி வழங்கும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இவ்வாறு ஒரு அறிக்கை விட்டிருப்பது பெண் பிள்ளைகளின் பெற்றோர் மனதில் மாபெரும் பயத்தை உண்டாக்கி இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழகம் முழுவதிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய எதிர்ப்பு சத்தமில்லாமல் கிளம்பி இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொந்த ஊரான எடப்பாடியில் திமுக வேட்பாளரை ஆதரிக்கும் விதமாக நேற்று இரவு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். சேலம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்குபெற்ற பொதுக் கூட்டத்தை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எடப்பாடி தொகுதிக்கு சென்றார். அந்த சமயத்தில் எடப்பாடியின் முதலமைச்சரை எதிர்த்து களம் காணும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், சாலையில் நடைபயணமாக சென்று பிரச்சாரம் செய்திருக்கிறார்.

எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, போன்ற இடங்களில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் நடை பயணமாகவே சென்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்து வாக்கு சேகரித்தார் ஸ்டாலின். அதன்பிறகு எடப்பாடி காவல்நிலையம் அருகில் இருக்கின்ற ஒரு பேக்கரி கடையில் பொதுமக்களுடன் உட்கார்ந்து தேனீர் அருந்தினார். அந்தப் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார் எதிர்கட்சித் தலைவர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எடப்பாடியில் வாக்கு சேகரித்த அதே நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஆதிராஜாராம் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த சமயத்தில், ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சமயத்தில் இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கொளத்தூர் தொகுதிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தோம் இப்பொழுது வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, அடிக்கடி இந்தப்பக்கம் வந்து செல்கிறார் என்று விமர்சனம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி.

அதோடு அதிமுக ஊழல் செய்து இருக்கிறது என்று போகுமிடமெல்லாம் தெரிவித்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர். நாங்கள் ஊழல் செய்ததாக இருக்கட்டும் இதே தொகுதிக்கு நான் வருகின்றேன் ஸ்டாலினும் வரட்டும் இருவரும் மேடையில் அமர்ந்து மைக் பிடித்து பேசுவோம். எந்தத் துறையில் ஊழல் நடந்திருக்கிறது என்பதை தெரிவிக்கவும் அதற்கு நான் பதில் சொல்கிறேன் நான் விளக்கம் அளிப்பதற்கு தயாராக இருக்கின்றேன் இங்கே இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் நீதிபதியாக இருந்து தீர்ப்பு சொல்லுங்கள். அதேபோல திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் செய்தீர்கள் என்று எங்கள் சார்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசமாக உரையாற்றியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.