அரசு ஊழியர்களுக்கு “பட்டை நாமம்..” !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை

0
115

அரசு ஊழியர்களுக்கு “பட்டை நாமம்..” !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு பட்டை நாமம் போட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

மேலும் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? எனவும் அவர் வினவியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முதல்வருக்கு கேள்வி

முதல்வருக்கு கேள்வி

திராவிட அரசு, நேர்மையான அரசு என்று தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் திராணி இருந்தால் உச்சநீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டுபட்டுள்ள திமுக அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ள முன்னாள், இந்நாள் திமுக அமைச்சர்கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அவர்கள் மீது தண்டனை வாங்கித் தருவாரா ? தற்போது தமிழகமெங்கும் நில அபகரிப்பு செய்யும், தனக்கு வேண்டிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா ?

பட்டை நாமம்

பட்டை நாமம்

பெண்களுக்கான தாலிக்கு தங்கம், மகளிர் இருசக்கர வாகனம் உள்ளிட்ட எண்ணற்ற நலத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திய இந்த மக்கள் விரோத அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளது. இதனால் கொதித்துப்போயுள்ள மக்களின் துயர் துடைக்க, வருகின்ற 16.09.2022 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாய்தா மேல் வாய்தா

வாய்தா மேல் வாய்தா

தனது அமைச்சர்களைக் காப்பாற்ற நிலுவையில் உள்ள பல வழக்குகளை நடத்தாமல், அவர்கள் வாய்தா மேல் வாய்தா வாங்குவதைத் தடுக்காமல், யோக்கியம் பேசும் இந்த முதலமைச்சர், எங்கள் ஆட்சியில் போடப்பட்ட, கையெழுத்திட்ட, நடைபெற்றுவந்த திட்டங்களுக்கு திறப்பு விழா காண்பதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் தொடுத்து, தனது ஏவல் துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

சந்து பொந்துகளில்

சந்து பொந்துகளில்

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. திமுக மந்திரிகளைப் போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்கமாட்டோம். காவல் துறையினர் நடுநிலைமையோடு, ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனத்திற்கு அடிபணியாமல் சட்டத்தின்படி, நீதி நேர்மையோடு பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி தெரிவித்துள்ளார். இதனிடையே, சிவனடியார்களின் பட்டை மற்றும் வைணவர்களின் திருநாமத்தை, மோசமான விஷயத்திற்காக எடப்பாடி உதாரணமாக பயன்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் இந்துக்கள் பலர் விமர்சனம் செய்வதை பார்க்க முடிகிறது.