நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி.. 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து!!

0
33

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி… 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து…

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பேட்ஸ்மேன் பேரிஸ்டோ மற்றும் பந்துவீச்சாளர் கஸ் அட்கின் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகின்றது. இதில் முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்ற பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டி நேற்று(செப்டம்பர்1) மேன்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் பேட்டிங் செய்தது. பேரிஸ்டோ மற்றும் ஹேரி பிரூக் ஆகியேரின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக பேரிஸ்டோ அரைசதம் அடித்து 86 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஹேரி பிரூக் அரைசதம் அடித்து 67 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணியில் பந்துவீச்சில் இஸ் ஷோதி 2 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி, மிட்செல் சேன்ட்னர் ஆகியோர் தலா  ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

199 ரன்களை இலக்காகக் கொண்டு நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 3 ரன்களுக்கும், டெவான் கான்வே 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தனர்.

அதன் பிறகு களமிறங்கிய டிம் சைப்ரட் சிறிது நிலைத்து நின்று விளையாடினார். 22 ரன்கள் எடுத்திருந்த பொழுது கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்க தொடர்ந்து டிம் சைப்ரட் பொறுமையாக விளையாடினார். இங்கிலாந்து பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணியின்.பேட்ஸ்மேன்கள் ஒரு புறம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மற்றொரு புறம் பொறுமையாக விளையாடிய டிம் சைப்ரட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 13.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் சிறப்பாக பந்துவீசி 20 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடில் ரஷித் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், பிரைடன் கார்ஸ், வில் ஜேக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணி 103 ரன்களுக்கு சுருண்டதால் இங்கிலாந்து அணி இரண்டாவது டி20 போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து வெற்றிக்கு சிறப்பாக பேட்டிங் செய்து உதவிய பேரிஸ்டோ ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இரண்டாவது டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால் 4 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி செப்டம்பர் 3ம் தேதி  பிர்மிங்கம் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.