பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு; கள்ளக்குறிச்சியில் 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது!!

0
58

கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், பிரதமரின் விவசாய கிசான் நிதியுதவி திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தில்  கடலூா் உள்பட 13 மாவட்டங்களில் மோசடி நடைபெற்றதாக புகாா் எழுந்தது.

இதனையடுத்து, கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி நடந்துள்ளதா என விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மோசடி நடந்திருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, வேளாண் துறை முதன்மைச் செயலா் ககன்தீப் தலைமையில் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன், முறைகேட்டில் ஈடுபட்டதாக அம்மாவட்டத்தை சேர்ந்த 2 உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிமேகலை, வீரன், ஏழுமலை மற்றும் கண்ணப்பன் ஆகிய 4 ஒப்பந்த ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K