ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொலை!!

0
159
#image_title

ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொலையின் முழு பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இராமேஸ்வரம் அருகே உள்ள துறைமுகம் பகுதி ஒட்டிய புது ரோடு பகுதியில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு முகேஷ் மற்றும் அகிலாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணம் முடிந்து 40 நாளில் முருகன் கோவில் திருவிழாவில் அகிலாவின் கணவர் முகேஷ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு அடித்த பெயிண்ட் கூட கலர் மங்காத நிலையில் நடந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கடந்த ஐந்தாம் தேதி பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடந்தது.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி ஆலய மேற்கு கோபுர சன்னதியில் அமைந்துள்ள முருகன் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழாவானது நடைபெற்றது.

இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அழகு குத்தி நேர்த்திக்கடனையும் செலுத்தினர்.

இந்த சூழ்நிலையில் புது மாப்பிள்ளையான முகேஷ் மற்றும் அவரது நண்பர் நம்பீஸ்வரன் ஆகியோர் அன்று மாலை 3 மணி அளவில் முருகன் கோவில் திருவிழாவை காண்பதற்காக திருவிழா நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்தப் பகுதியில் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் முகேஷ் மற்றும் அவரது நண்பர் நம்பீஸ்வரனிடம் இருந்த செல்போனை மாந்தோப்பு பகுதி இளைஞர்கள் தட்டிப் பறித்துக் கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது.

தங்களது செல்போனை இவர்கள் தருமாறு கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்ததால் அந்தப் பகுதியில் உள்ள துறைமுக காவல் நிலையத்தில் முகேஷ் மற்றும் அவரது நண்பர் புகார் அளித்துவிட்டு வீடு திரும்பிய போது அதே பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த செல்போனை பறித்துச் சென்று இளைஞர்கள், இவர்களை வழிமறித்து கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிகிறது.

படுகாயம் அடைந்த இருவரும் முதலுதவி சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சையில் இருந்த முகேஷ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதை கேள்விப்பட்ட முகேஷ் உறவினர்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் இன்று காலை ஒன்று திரண்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொழுது அதை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு வேலிகளை கீழே தள்ளிவிட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கோபு,வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சமுதாயத் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் காவல்துறை சார்பில் இறந்தவரின் முகேஷ் குடும்பத்திற்கு ரூபாய் மூன்று லட்சம் அளிப்பதாகவும் மற்றும் தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் மேலும் கொலைக்கு சம்பந்தப்பட்ட 12 நபர்களையும் உடனடியாக கைது செய்யப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்து வெளியில் வந்தனர்.

அப்போது உள்ளே நடந்து பேச்சுவார்த்தை தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை எனக்கூறி மீண்டும் அந்த பகுதியில் பெண்கள் மற்றும் ஆண்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

பிறகு அந்த பகுதியில் இருந்த காவலர்கள் பேச்சுவார்த்தை குறித்து எடுத்துக் கூறி கலந்து செல்லுமாறு கூறியதை தொடர்ந்து கலந்து சென்றுள்ளனர்.

திருமணமாகி 40 நாளான திருமண தம்பதியினரின் கணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இறந்த முகேஷின் உடல் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 12 நபர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர் நேற்று மேலும் ஐந்து நபர்களை மாவட்ட காவல்துறையின் சார்பில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது மீதமுள்ள ஐந்து நபர்களை போலீசார் மூன்று தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

author avatar
Savitha