கேரளா மாநிலத்தில் புலிகள் அதிகரிப்பு… கணக்கெடுப்பில் வெளிவந்த தகவல்!!

0
52
கேரளா மாநிலத்தில் புலிகள் அதிகரிப்பு… கணக்கெடுப்பில் வெளிவந்த தகவல்…
கேரளா மாநிலத்தின் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கணக்கெடுப்பின் மூலமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட  கணக்கெடுப்பு அறிக்கை மூலம் கேரளா மாநிலத்தின் வனப்பகுதியில் 213 புலிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதிலும் வனப்பகுதியில் புலிகள் உள்பட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த கணக்கெடுப்பின் இறுதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தி வருகின்றது. இந்த கணக்கெடுப்பானது முழுவதுமாக மொபைல் ஆப் பயன்படுத்தி பதிவு செய்யப்படுகின்றது.
ஜியோகிராபிகல் இன்பர்மேசன் சிஸ்டம் என்னும் அடிப்படையில் இந்திய வனவிலங்கு நிறுவனம் உருவாக்கிய மொபைல் செயலியான ‘எம் ஸ்ட்ரைப்ஸ்’ என்ற மொபைல் செயலி(App) மூலமாக இந்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
கணக்கெடுப்பு நடத்துவதற்காக வனப்பகுதிகளில் முதலில் புலிகளுக்கு உணவாகும் விலங்குகளின் இருப்பு, புலிகளின் எச்சம், புலிகளின் கால்த்தடம், புலிகள் மரத்தில்  ஏற்படுத்திய அடையாளங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணப் பாதையை உறுதி செய்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.  குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு பதிவான கண்காணிப்பு கேமிராக்களின் காட்சிகளை மதிப்பாய்வு செய்து புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகின்றது.
அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்பொழுது கேரளா மாநிலத்தின் வனப்பகுதியில் 213 புலகள் இருக்கின்றது. 2018ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 190 புலிகள் இருந்த நிலையில் தற்பொழுது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் 31 புலிகளும், பெரியாறு புலிகள் காப்பகத்தில் 30 புலிகளும் உள்ளன. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கேரளா மாநிலத்தை தவிர கோவா, தமிழகம், கர்நாடாகா ஆகிய மாநிலங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலை பரவியுள்ளது. அங்கு புதிய கணக்கெடுப்பின் படி 1087 புலிகள் உள்ளது. கர்நாடகா, தமிழகம், கோவா ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 981 புலிகள் இருந்தது.
2018ம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் கேரளா மாநிலத்தின் வனப்பகுதியோடு சேர்த்து கர்நாடக மாநிலத்தில் 524 புலிகளும், தமிழகத்தில் 264 புலிகளும் இருந்தது. தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கர்நாடக மாநிலத்தில் 563 புலிகளும், தமிழகத்தில் 306 புலிகளும் உள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது