பவர் யாருக்கு? சபாநாயகரின் அதிர்ச்சி வைத்தியத்தால் சட்டசபை கூட்டத்தை முழுமையாக புறக்கணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு?

0
86

பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதால் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முழுவதுமாக புறக்கணிக்க அதிமுகவில் இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதிமுகவில் உண்டாகியுள்ள ஒற்றை தலைமை தொடர்பான மோதல் காரணமாக, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை அதிரடியாக நீக்கினார். அதேபோல எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதாக சபாநாயகருக்கு கடிதம் வழங்கினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பன்னீர்செல்வம் தரப்பு ஒரு கடிதத்தை சபாநாயக வழங்கியது. அந்த கடிதத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் எனவும், தன்னை கேட்டு தான் எந்த விதமான முடிவும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் சட்டசபை அலுவலர்கள் குறித்து தன்னிடமே ஆலோசிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் பன்னீர்செல்வம். இந்த நிலையில், அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்று உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மாறி, மாறி வழக்கு தொடுத்தார்கள்.

ஒருமுறை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும், மற்றொரு முறை பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் தீர்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மறுபடியும் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழக சட்டப்பேரவை கூட்டம் என்று ஆரம்பமாகிறது.

அப்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக சார்பாக நடைபெற உள்ள விவாதங்களில் யார் பங்கேற்பது என்பது தொடர்பாக விவாதிக்க ஆர்பி உதயகுமாருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சபாநாயகர் இடம் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டு கடிதம் வழங்கினார்.

ஆனால் சபாநாயகர் இதுவரையில் அந்த கடிதம் தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எப்பொழுதும் போல அலுவல் ஆய்வு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம், கொறடா எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே இன்றைய சட்டப்பேரவை கூட்டம் ஆரம்பித்தவுடன் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சட்டசபை கூட்டமானது ஒத்திவைக்கப்பட உள்ளது. அதோடு பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தமிழக சட்டசபை கூட்டத்தொடரை முழுவதுமாக புறக்கணிக்க அதிமுகவில் இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதே சமயத்தில் சட்டசபையில் சபாநாயகர் அறையில் நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அதிமுக சார்பாக பன்னீர் செல்வத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நடைபெற்று வருவதால் அதிமுகவில் முன்பு இருந்த நிலையே நீடிப்பதாக சபாநாயகர் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.