கொடநாடு மற்றும் கனகராஜ் மரண வழக்கு! மீண்டும் சூடுபிடிக்கும் காவல்துறை விசாரணை!

0
116

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததிலிருந்தே தமிழகம் ஒருவித பரபரப்பில் இருந்து வந்தது.

அதன் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றும் யூகிக்க முடியாத அளவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அடுத்த முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்றார், சசிகலாவின் வற்புறுத்தலை தொடர்ந்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்ம யுத்தத்தை மேற்கொண்டார்.

அதன்பின்னர் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரையும் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைத்திருந்தார் சசிகலா. இதன் பின்னர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேர்ந்தது . உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல் அமைச்சராக நியமனம் செய்து விட்டு அவர் சிறைக்கு சென்று விட்டார். இதன் பிறகு மெல்ல,மெல்ல அந்த பரபரப்பு அடங்க தொடங்கியது.

அடுத்தபடியாக ஜெயலலிதாவிற்கு சொந்தமாக இருந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற மர்ம மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தது. இதனால் அதனை கண்டுபிடிப்பதற்கு மாநில அரசு சார்பாக தற்சமயம் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது, அதன்படி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுவார் கனகராஜ் கொலை வழக்கில் நேற்று முதல் மறுபடியும் விசாரணை ஆரம்பமானது, திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் மறுபடியும் வழக்கு விசாரணை வேகம் எடுக்கத் தொடங்கியது. வழக்கை பொறுத்த வரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்தா அல்லது திட்டமிட்ட படுகொலையா என்ற சந்தேகம் இதுவரையில் நீடித்து வருகிறது.

கனகராஜ் மரண வழக்கில் அவர் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்று சந்தேகம் இருப்பதாக அவருடைய மனைவி கலைவாணியும் ,அவருடைய அண்ணன் தனபாலும் தெரிவித்து இருந்த சூழ்நிலையில், நேற்று முதல் கனகராஜ் கொலை குறித்த விசாரணையை மறுபடியும் ஆரம்பமானது.

சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் உத்தரவிட்டதன் அடிப்படையில் கனகராஜ் மரணம் வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆத்தூர் துணை காவல் துறை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில், ஆத்தூர் அருகே சக்தி நகரில் இருக்கக்கூடிய கனகராஜன் உறவினர் ரமேஷ் வீட்டிற்கு சென்ற 20க்கும் அதிகமான காவல்துறையினர் ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்திருக்கிறார்கள்.

அதேபோல மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் கனகராஜ் விபத்துக்குள்ளான பகுதியையும், காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விபத்துக்குள்ளான வாகனத்தையும், பார்வையிட்டு ஆய்வு செய்து இருக்கிறார். விபத்து நடைபெற்ற அன்று வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் யார் என்பது தொடர்பாகவும், கேட்டறிந்து விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார் ராமச்சந்திரன்.

அதோடு தனிப்படை காவல்துறையினர் ஆத்தூரில் முகாமிட்டு கனகராஜ் மரணம் தொடர்பாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருடைய சகோதரர் தனபால் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய நபர்களிடம் தொடர்ச்சியான விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.

அதேநேரம் கொடநாடு பங்களாவில் கேமரா ஆப்பரேட்டர் வினோத் மர்மமான முறையில் மரணம் அடைந்தது மற்றும் கொடநாடு பங்களாவில் அந்த சமயத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, அதோடு பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றது, போன்ற சம்பவங்களை ஒன்றிணைத்து பார்த்தால் இதில் உள்நோக்கம் ஏதேனும் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அதோடு அந்த சமயத்தில் இதனால் அரசியல் லாபம் பார்ப்பதற்காக யாரோ ஒருவர் இதனை திட்டமிட்டு செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.