குண்டர் சட்டத்தில் இருந்து தப்பிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கைதிகள்
தமிழகத்தையே அதிர வைத்த வழக்குகளில் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு. இதில் 4 பேர் நூற்றுக்கணக்கான இளம் பெண்களை பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மயக்கி, காதலிப்பது போல் நடித்து, சொகுசு பங்களாவுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து, அந்த வீடியோவை வைத்து இளம்பெண்களை மிரட்டி உள்ளனர். இதன் மூலம் இந்த கும்பல் லட்சக்கணக்கான பணத்தை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் திருநாவுக்கரசு சபரிராஜன் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் ஜாமீனில் வெளிவர முடியாமல் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்
இந்த நிலையில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோர்களின் தாயார்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்றும் இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது முறையற்றது என்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து தங்களிடம் எந்தவித தகவல் தெரிவிக்கவில்லை என்றும் எனவே இவர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்வை சீரழித்த கயவர்களை குண்டர் சட்டத்தில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.