தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தயாராகும் டிடிவி தினகரன் கலக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் சொல்லியது போல தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மேலும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கூறி வருகிறார். கடந்த 3 வருடங்களாக திமுக தலைவர் ஸ்டாலின் இது போன்ற கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருகிறார்.பிரகாசமான வாய்ப்பிருந்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அளவிற்கு ஸ்டாலினுக்கு அரசியல் திறமை இல்லை என்றும் அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர்.
தற்போதைய சூழலில் எடப்பாடி தலைமையிலான தமிழக சட்டப்பேரவையில் 22 இடங்கள் காலியாக உள்ளது. அதிமுகவிடம் 114 எம்.எல்.ஏ.க்களும்,திமுகவிடம் 96 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். மேலும் சுயேச்சை எம்.எல்.ஏவாக டிடிவி. தினகரன் இருக்கிறார். இது இல்லாமல் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி மற்றும் கருணாஸ், தனியரசு ஆகியோர்களும் இருக்கிறார்கள். அதேபோல் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் அதிமுகவின் மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் இடைத்தேர்தல் முடிவிற்கு பிறகு அதிமுக பெரும்பான்மை பெற குறைந்தது 7-8 இடங்கள் தேவைப்படுகிறது.
இதனால் ஆட்சியை தக்க வைத்து கொள்ள தினகரனுடன் தொடர்பில் இருப்பதாக கூறி 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு 4 அல்லது 5 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் தொடரலாம் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி திட்டத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் தினகரனுக்கு ஆதரவாகவும் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதேபோல் சபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடக்கும் வரை சபாநாயகர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது நீதிமன்றம் கூறி விட்டது.
இதனிடையே சமீபத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்போம் என கூறியிருந்தார். திமுகவிற்கு அமமுக உதவ போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அதாவது சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அமமுக திமுகவிற்கு ஆதரவு அளிக்கும். இதனால் சபாநாயகர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுக அரசு கவிழ கூட வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் தான் தினகரன் பல நாட்களாக சொல்லிக்கொண்டு வரும் அந்த அமமுக ஆதரவான ஸ்லீப்பர் செல்கள் மூலம் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் சபாநாயகற்கு எதிராக வாக்களிப்பார்கள். இல்லையென்றால் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து மொத்தமாக ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ மே 23-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவிற்கு பிறகு அதிமுக ஆட்சியில் தொடருமா? கவிழுமா? அல்லது திமுக ஆட்சியமைக்குமா? காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.