மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணி உடைகிறதா?
நடைபெற்று வருகின்ற மக்களவை தேர்தலில் தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இரண்டு கூட்டணிகள் எதிரெதிராக போட்டியிடுகின்றன. மேலும் சில மாநில கட்சிகள் தனியாக போட்டியிடுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் தேசிய கட்சியான பாஜக,அதிமுக,பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுடனும், இவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி திமுக,விசிக,மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என அதன் கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.மேலும் அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரன் சார்பாக அமமுக, திரையுலகத்தை சேர்ந்த சீமான் சார்பாக நாம் தமிழர் கட்சி, கமலஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் தனியாக போட்டியிட்டன.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தாலும் தேர்தல் முடிவிற்கு பிறகு திமுக இந்த கூட்டணியில் நீடிக்குமா என்று பெரும்பாலோனோருக்கு சந்தேகம் இருந்தது. இந்த சந்தேகம் வருவதற்கு காரணம் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு திமுக தலைவர் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கும் சில மாநில கட்சி தலைவர்களை சந்தித்தது தான். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ், மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, கர்நாடகாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் குமாரசாமி, கேரளாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பினராயி விஜயன், டெல்லியில் இருக்கும் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து மூன்றாவது அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வந்தனர்.
மூன்றாவது அணிக்காக மற்ற மாநில தலைவர்களுடன் திமுக தலைவருடைய சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்ததும் மூன்றாவது அணிக்காக ஸ்டாலின் எடுத்த முயற்சியை கைவிட்டு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்தார்.இதனால் மூன்றாவது அணி என்பது வழக்கம் போலவே வெறும் பேச்சுவார்த்தையுடன் போக ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த கட்சிகள் தனித்தே போட்டியிட்டன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யும் பொழுது ராகுல்காந்தியை பாரத பிரதமராகவும், ஸ்டாலினை முதலமைச்சராகவும் முன்னிறுத்தி தான் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். அதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் இந்த பிரச்சாரங்கள் மற்றும் நடந்து முடிந்த தேர்தல் ஒரு புறமிருக்க,தேர்தலுக்கு முன்பிலிருந்தே மூன்றாவது அணி அமைக்க முயற்சித்த சில மாநில முதலமைச்சர்கள் தற்போதும் தேர்தலுக்கு பிறகாவது மூன்றாவது அணியை அமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் அன்று பெரிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் இந்த கட்சிகள் நம்புவதால் மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மூன்றாவது அணியை அமைத்து தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு தயாராகும் விதமாக தான் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல் கட்ட பணிகளை தொடங்கி உள்ளதாகவும், அதற்காக தற்போது கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை சந்திக்க உள்ளதாகவும் அதை போல திமுக தலைவர் மு க ஸ்டாலினை வருகின்ற 13 ஆம் தேதி சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் ஆந்திர பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு, பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் போன்றோரும் இணைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஒரு வேளை மக்களவை தேர்தல் முடிவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் ஏற்கனவே திட்டமிட்டபடி மாநில கட்சிகள் இணைந்து மீண்டும் ஒரு 1996 ஆம் ஆண்டு நடந்தது போல மூன்றாவது அணியின் சார்பாக தேசிய அளவில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மூன்றாவது அணியில் தமிழக கட்சியான திமுக இணைவது அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமே.ஏனெனில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததே மு.க.ஸ்டாலின் தான். அதேபோல அவர் பிரசாரத்தின் போதும் பிஜேபியின் எதிர்ப்பு வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் சார்பில் பிரதமர் ராகுல் காந்தி தான் என்றும் கூறி பிரச்சாரம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணி உடைகிறதா? இந்நிலையில் அவர் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி மூன்றாவது அணியில் இணைவாரா அல்லது காங்கிரசுடனே தொடர்வாரா என்பது எல்லாம் தேர்தல் முடிவு வெளியான பிறகு தான் தெரியும். இந்நிலையில் அவர் மூன்றாவது அணிக்கு முயற்சித்து வரும் சந்திரசேகர் ராவுடன் சந்திப்பதற்கு தேதி ஒதுக்கி உள்ளது தான் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சந்திப்பினால்தேர்தல் முடிவு வெளியிடுவதற்கு முன்பே எதாவது மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் இது போன்ற சினிமா செய்திகளை படிக்க நமது News4 Tamil முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.