பாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்!

0
130
#image_title
பாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்!
மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெற பாஜக சதி செய்து வருவதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் கூறி தமிழக முழுவதும் விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். பாஜகவின் சதியை முறியடிக்க வேண்டும். 100% ஒப்புகைச் சீட்டை எண்ணித்தான் தேர்தல் அறிவிப்பு வெளியாக வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஈவிஎம் இயந்திரங்களை வைத்து பாஜக சதி செய்கிறது. அதற்கு தேர்தல் ஆணையமும் துணை போவதாக மக்களிடையே சந்தேகம் எழும்பியுள்ளது.
எனவே வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து மட்டும் தேர்தல் அறிவிப்பு வெளியாக கூடாது. வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகை சீட்டை இணைக்க வேண்டும். மக்கள் வாக்களித்த பின்னர் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை ஒப்புகை சீட்டின் மூலம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த ஒப்புகை சீட்டை ஒரு பெட்டிக்குள் போட வேண்டும். இறுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் எண்ணிக்கையும், ஒப்புகைச் சீட்டின் எண்ணிக்கையும் சரிபார்த்த பின்னரே தேர்தல் அறிவிப்பு வெளியாக வேண்டும்.
இந்த கோரிக்கையை தான் இந்தியா கூட்டணி வலியுறுத்துகிறது. ஆனால் பாஜக அதனை கண்டு கொள்வதில்லை. தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்து. ஆனால் அதனை ரத்து செய்து பாஜக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக அமைச்சரை குழுவில் இணைத்துள்ளது. எனவே பாஜக அரசின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. இதனை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 23.02.2024 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம்.
தேர்தலை நேர்மையாக நடத்த வலியுறுத்துவோம்! பாஜகவின் சதி திட்டத்தை முறியடிப்போம்! என வலியுறுத்த ஜனநாயக சக்திகளையும், தோழமைக் கட்சிகளையும் அழைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
author avatar
Savitha