தமிழகத்தில் உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

0
330
#image_title

தமிழகத்தில் உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணம் மதுக்கடைகள் தான் என்பது நன்றாக தெரிந்தும் கூட அரசு அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணம் மதுக்கடைகள் தான் என்பதை அறிந்ததால் தான் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டிருந்த 3,321 டாஸ்மாக் மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் 90 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைகளை பா.ம.க. மூடியது. பின்னாட்களில் மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை அணுகி விலக்கு பெற்றதால் அந்த மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

அதன்பிறகு தான் நெடுஞ்சாலை விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் 20 முதல் 25 சதவீதம் வரை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் தான் ஏற்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மது போதையில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைத்து காட்டப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் நிகழும் சாலை விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை மது போதையால் நிகழ்ந்ததாகும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான விபத்துகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விபத்துகளுக்கு மதுக்கடைகள் தான் காரணம் எனும் போது, அவற்றை மூடுவதுதான் மக்கள் நலன் காக்கும் செயலாக இருக்க முடியும். குறைந்தபட்சம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், மாவட்ட சாலைகளிலும் உள்ள மதுக்கடைகளை மட்டுமாவது மூட வேண்டும்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K