2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி புரிவது கட்டாயம்..! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
47

மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்றும் அதன் பிறகே, அவர்களின் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து 276 மருத்துவ மாணவர்கள், அகில இந்திய மருத்துவ படிப்பு கொள்கையில் இது போன்ற எந்த நிபந்தனைகளையும் விதிக்கப்படவில்லை என்றும் தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதமான உத்தரவு என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணி புரிவது கட்டாயமில்லை என்றும், சான்றிதழ்களை தமிழக அரசு திரும்ப வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தார். நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையிலான அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தனர். மேலும், மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள், 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக பணிபுரிந்தால் தான் அவர்களது சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணை செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும், மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணி வழங்க முடியாத பட்சத்தில் மாணவர்களின் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K