ஆண்டுதோறும் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா – காரணம் என்ன தெரியுமா ?

0
145
#image_title

ஆண்டுதோறும் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா – காரணம் என்ன தெரியுமா ?

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டும் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்த அங்காளம்மனுக்கு நடத்தப்படும் இந்த திருவிழாவின் முக்கிய சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டு திருவிழாவிற்கும் புதிய தேர் வடிவமைக்கப்படுவது தான். இந்த அங்காளம்மன் கோயிலில் நடக்கும் தேர் திருவிழாவில் தேவர்கள் அனைவரும் தேரின் பாகங்களாக இருந்து அம்மனுக்கு விழா எடுப்பதாக ஐதீகம். அதனால் இவ்வழக்கம் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. இதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தேர் செய்யும் பணியானது துவங்கியது என்று செய்திகள் வெளியானது.

கோலாகலமாக அரங்கேறும் திருவிழா

கடந்த 8ம் தேதி கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்கியதை தொடர்ந்து, 9ம் தேதி மயானக்கொல்லையும், 12ம் தேதி தீமிதி திருவிழாவும் சிறப்பாக நடந்தது. இந்நிலையில் இந்த மாசி பெருவிழாவின் உச்சகட்ட முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று(மார்ச்.,14) நடக்கவுள்ளது. திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வானது மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த திருவிழாவில் கலந்துக்கொள்ள விழுப்புரம், சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, கூட்டநெரிசலில் பக்தர்கள் சிக்காமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளது. காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அரசு பேருந்துகளும் பக்தர்கள் வசதிக்காக இன்று இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த திருவிழா காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக வரும் 16ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.