அதிமுக ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நியாயம் வழங்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் அதிரடி!

0
78

மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்வாகி இருந்தவர்களின் போராட்டத்திற்கு விரைவாக தீர்வு காணப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கின்றார்.மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்காக தேர்வில் பங்கேற்று வேலை கிடைக்காதவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தி சமுதாய கூடங்களில் அடைத்திருக்கிறார்கள். தங்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்று தெரிவித்து இவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து நேற்று இந்தப் போராட்டக் குழுவில் இருந்து 8 பேர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை சந்தித்து மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். அந்த மனுவில் இதுவரையில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வேலைக்காக விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். அதில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வில் நாங்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்து இருக்கின்றோம். ஆனாலும் இது வரையில் எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை குறைந்த மதிப்பெண்களை வாங்கி இருக்கின்ற பலர் பணி ஆணை பெற்று இருக்கிறார்கள். முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்தபடி 16949 கேங்மேன் பணி ஆணை வழங்காமல் 9 ஆயிரத்து 613 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை இதுவரையில் வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல மீதம் இருக்கின்ற 5336 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று நாங்கள் போராட்டம் செய்து வருகிறோம் என்றும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்து இருக்கிறார்கள்.

இருந்தாலும் இதுவரையில் எந்த விதமான பதிலும் அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களில் பல பேருக்கு வயது வரம்பு மீறி விட்டதால் இனி வரும் தகுதி தேர்விலும் பங்கேற்க இயலாது. எங்களுடைய குடும்பங்கள் எல்லாம் இந்த வேலையை நம்பி தான் இருக்கின்றது. உங்களால் மட்டும்தான் பணி நியமன ஆணை வழங்கப்படாமல் விடுபட்டுப்போன 5336 குடும்பங்களுக்கு வழிகாட்ட இயலும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று தன்னுடைய வலைதள பக்கத்தில் சென்ற அதிமுக ஆட்சியில் தமிழக மின்சார வாரியம் சார்பாக நடத்தப்பட்ட பணி நியமனத்தில் வஞ்சனை செய்யப்பட்ட 5336 பேர் சார்பாக எட்டு பேர் கொண்ட குழு தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்து முறையிட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு இழுத்துச்சென்று கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.