டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்… பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு!!

0
26

 

டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்… பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு…

 

தற்பொழுது நடந்து வரும் இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க பை-பாஸ் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக தனியாக சாலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

சென்னையில் பெருங்களத்தூர் முதல் புழல் வரை உள்ள புறவழிச் சாலையானது சென்னை – கொல்கத்தா, சென்னை – திருச்சி, சென்னை-பெங்களூரு ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 32 கிலோ மீட்டர் தூரம் உள்ள சென்னை பெருங்களத்தூர்-புழல் சாலையில் கார்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை சென்று வருகின்றது. அதே போல இருசக்கர வாகனங்களும் செல்வது தற்பொழுது அதிகரித்து வருகின்றது.

 

இந்த சாலையில் பெரும் கடினமான விஷயம் என்னவென்றால் சென்னை பிற நகரங்களுடன் இணைக்கும் இந்த பெருங்களத்தூர்-புழல் சாலையில் மின்விளக்குகள் கிடையாது. இதனால் இரவில் இருளில் மூழ்கி கிடக்கும் இந்த சாலையில் வாகனங்கள் செல்வது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. மேலும் வேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மீது கனரக வாகனங்கள் உள்ளிட்டவை மோதி விபத்துக்களும் ஏற்படுகின்றது. கடந்த ஆறு ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 165 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதனால் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று தனியாக சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருந்தது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நிதி ஒதுக்கவில்லை. இதன் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது.

 

விபத்துகளையும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த இருசக்கர வாகனங்களுக்கு தனியாக சாலை அமைக்க வேண்டும். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றது.

 

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் “சென்னை புறவழிச்சாலையில் மின்விளக்குகள் இல்லை என்ற பெருங்குறை இருந்து வந்தது. ஆனால் அந்த குறையை தீர்க்கும் வகையில் 23 கோடி ரூபாய் செலவில் 2129 மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

 

இந்த புறவழிச்சாலை கனகரக வாகனங்கள் செல்வதற்கு என்று தனியாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்த சாலையில் தற்பொழுது இருசக்கர வாகனங்கள் அதிகளவு பயணிக்கின்றது. இதனால் இருசக்கர வாகனங்களுக்கு தனி வழித்தடம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மீண்டும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும். நிதி பெற்ற பின்னர் சென்னை பெருங்களத்தூர்-புழல் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தனியாக சாலை அமைக்கப்படும்” என்று கூறினார்.