பண்ணாரி மாரியம்மன் கோவில் ‘குண்டம்’ திருவிழா – அரங்கேறியது கம்பம் சாற்றும் நிகழ்வு!!

0
137
#image_title

பண்ணாரி மாரியம்மன் கோவில் ‘குண்டம்’ திருவிழா – அரங்கேறியது கம்பம் சாற்றும் நிகழ்வு!!

சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்றது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் ‘குண்டம்’ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான திருவிழா நடத்த கடந்த 11ம் தேதி பூச்சாற்றுடன் துவங்கியது. 12ம் தேதி இரவு சருகு மாரியம்மன் சப்பர ஊர்வலம் புறப்பட்டது. பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட இந்த சப்பரமானது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்த 100 கிராமங்கள் வழியே ஊர்வலம் சென்று நேற்று இரவு 12 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊர்வலம் சென்று வந்து அம்மனை வரவேற்று கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர் என்று தெரிகிறது.

இதனை தொடர்ந்து, இக்கோவிலை சுற்றியுள்ள கோவில்கள் அனைத்திலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி கொண்டு கோவிலின் ஓர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஊஞ்சல் மரக்குச்சிகள் மற்றும் வேம்பு குச்சிகளை கையில் எடுத்து கொண்டு கோவிலை வலம் வந்து, கோவிலின் வெளியே 5 அடி ஆழம், 15 அடி கொண்ட விட்டம் கொண்ட குழியில் போட்டுள்ளனர். அதன் பின்னர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கம்பம் சாற்றும் நிகழ்வு அரங்கேறியது. அங்கிருந்த பக்தர்கள் குழியின் கம்பத்தில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அந்த குழியில் போடப்பட்டிருந்த வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகள் மீது கற்பூரத்தின் நெருப்பு பட்டதையடுத்து ஆள் உயரத்திற்கு நெருப்பு ஜுவாலையாக எரிந்தது.

அத்தருணம் பக்தர்கள் பரவசமடைந்து முழக்கம் எழுப்பிய நிலையில், அங்கு கூடியிருந்த மலைவாழ் மக்களும், பக்தர்களும் பீனாட்சி இசைக்கு மயங்கி நடனமாடி கம்பத்தை வழிபட்டு சுற்றி வந்தனர். இந்த வழிபாடானது 25ம் தேதி வரை நடக்கும். வரும் 26ம் தேதி அதிகாலை 4.00 மணியளவில் விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் அதாவது தீ மிதிக்கும் விழாவானது நடைபெறவுள்ளது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதிக்க குழியில் இறங்குவர்.

தொடர்ந்து 27ம் தேதி அப்பகுதியில் உள்ள பெண்கள் பிற்பகல் 12 மணியளவில் மாவிளக்கு போட்டு எடுத்து வருவார்கள். அன்று இரவு 10 மணியளவில் சிம்ம வாகனத்தில் அம்மன் உலா நடைபெறும். தொடர்ந்து 28ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் 29ம் தேதி தங்கரத புறப்பாடு துவங்கவுள்ளது. இறுதியாக ஏப்ரல் 1ம் தேதி மறுபூஜை நடைபெறும் அதோடு அன்று இரவே இத்திருவிழா இனிதே நிறைவுறும். தற்போது இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.