எங்களால்தான் நிறைய வருமானம்… உலகக்கோப்பையில் நாங்கள் விலகினால்? – பாக் கிரிக் வாரியம் அதிர்ச்சி கருத்து!

0
85

எங்களால்தான் நிறைய வருமானம்… உலகக்கோப்பையில் நாங்கள் விலகினால்? – பாக் கிரிக் வாரியம் அதிர்ச்சி கருத்து!

ஐசிசி போட்டி அட்டவணைகளின் படி அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசு அனுமதி அளித்தால் பாகிஸ்தான் செல்ல தயாராக இருப்பதாக பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால் இப்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா “இந்திய அணி ஆசியக் கோப்பை விளையாட பாகிஸ்தான் செல்லாது” என்று கூறியுள்ளார். மேலும் தொடர் வேறு பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் 50 ஓவர் போட்டியாக நடக்க உள்ளது.

 இந்நிலையில் இந்த முடிவு குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா “ஆசியக் கிரிக்கெட் அசோஷியேஷனில் இருந்து நாங்கள் விலகிக் கொள்ளலாம் என இருக்கிறோம். இந்த அமைப்பு இப்போது ஆசியாவில் கிரிக்கெட்டை வளர்க்க எந்த முயற்சியும் செய்வதில்லை.

அதேபோல அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஐம்பது ஓவர் உலகக்கோப்பையில் இருந்தும் நாங்கள் விலகிக் கொள்ளலாம் என நினைக்கிறோம். இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் மூலம்தன் ஐசிசி பெரியளவில் வருவாய் ஈட்டுகிறது. நாங்கள் விலகினால் பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்ப்டும் என்பது ஐசிசிக்கு தெரியும்” எனக் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. கடைசியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி 2013 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்திய அணி 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பைக்காகதான் கடைசியாக பாகிஸ்தான் சென்று விளையாடியது.