ஒமைக்ரான் நோய்த்தொற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! நடந்தது என்ன?

0
132

நாட்டில் புதிய வகை நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதுவரையில் 261 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? மாநில அரசுகள் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன? என்பது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய அரசு உயர் அதிகாரிகள், நிதி ஆயோக் உறுப்பினர்கள், எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றார்கள் என்று சொல்லப்படுகிறது மாலை 7 மணிக்கு ஆரம்பித்த இந்த கூட்டம் இரவு 9 மணியளவில் முடிவடைந்தது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாட்டில் புதிய வகை நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது, எல்லோரும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும், இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நோய் தொற்றுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்த பிரதமர் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சப்ளை கருவிகள் நிறுவப்பட்டு முழுமையாக செயல்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

எல்லா மாநிலங்களிலும் சுகாதாரக் கட்டமைப்பு, மனிதவளம், அவசர ஊர்தி, மருந்துகள், நோயாளிகளை தனிமைப் படுத்துவதற்காக வசதி மற்றும் வீட்டுத்தனிமையில் இருப்பவர்களை கண்காணித்தல், உள்ளிட்டவற்றில் மாநில அரசுகள் தயார் நிலையில் இருப்பதை நாள்தோறும் மாநிலங்களுடன் தொடர்புகொண்டு உறுதி செய்ய வேண்டும் மற்றும் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும், என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கிறார்.

நோய் தொற்று அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் புதிய வகை நோய் தொற்று அறிகுறிகள் காணப்படும் மாதிரிகளை உடனடியாக மரபணு பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என கூறியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

சரியான சமயத்தில் சிகிச்சை வழங்குவதற்கு பரிசோதனை துரிதப்படுத்துவதும், நோய்தொற்று பரவலை தடுப்பதற்காக தொடர்பு தடமறித்தலில் அதிக கவனம் செலுத்துவதும், மிக, மிக, முக்கியம் இதன் காரணமாக, நோய்த் தொற்று பரவலை மாநில நோய் தடுப்பு குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

நாட்டில் தகுதியான மக்கள் தொகையில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

வீடுதோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் காரணமாக, பொது மக்களை ஊக்குவிக்க இயன்றது. அதோடு தடுப்பூசி செலுத்துவது அதிகரிப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எல்லா மாநிலங்களும் 100% தடுப்பூசி என்ற இலக்கை அடைய வேண்டும், குறைந்த அளவு தடுப்பூசிகளை செலுத்திய மற்றும் நோய்த் தொற்று அதிகரித்துவரும் மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பப்படும். இந்த குழு மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் நோய் தொற்றை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.

நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய சூழ்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் புதிய வகை நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.