திட்டமிட்டே பறிக்கப்படும் கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல் 

0
126
Anbumani Ramadoss Latest Speech about ADMK and PMK Alliance-News4 Tamil Latest Political News in Tamil
Anbumani Ramadoss Latest Speech about ADMK and PMK Alliance-News4 Tamil Latest Political News in Tamil

திட்டமிட்டே பறிக்கப்படும் கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல்

திட்டமிட்டே கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளை விதிகளை மீறி பறிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கருவூலக் கணக்குத் துறையில் பணியாற்றும் உதவி கணக்கு அலுவலர்களுக்கு திட்டமிட்டு பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், தேவையின்றி பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அதிகாரிகளுக்கு முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை, விதிகளை மீறி துறையின் தலைமையே மறுப்பது சமூக அநீதியாகும்.

தமிழக அரசின் ஒவ்வொரு துறைக்கும் பணி விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிகளின்படியே பணி நியமனங்களும், பதவி உயர்வும் மேற்கொள்ளப்பட வேண்டும். கருவூலக் கணக்குத் துறை மாநில பணிகள் சிறப்பு விதிகளின்படி உதவி கணக்கு அலுவலர் நிலையில் பணியில் சேருபவர்கள், அந்தத் துறையின் கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர் பதவிகள் வரை பதவி உயர்வு மூலம் முன்னேற முடியும். ஆனால், கணக்கு அலுவலர் பணியில் நேரடியாக சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இப்போது இந்த பணிகள் வழங்கப்படுகின்றன. அதனால், உதவி கணக்கு அலுவலர், உதவி கருவூல அலுவலர் ஆகிய பணிகளில் சேருபவர்களால் உதவி இயக்குநர், துணை இயக்குநர் நிலையைக் கடந்து பிற உயர் பதவிகளுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

உதவி கணக்கு அலுவலர்களுக்கு உயர் பதவி வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு காரணம், கணக்கு அலுவலர்கள் பதவி உயர்வின் மூலம் நியமிக்கப்படாமல், நேரடியாக நியமிக்கப்படுவது தான். கருவூலக் கணக்குத் துறை மாநில பணிகள் சிறப்பு விதிகளின்படி 10 கணக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றால், அவர்களில் ஒருவர் மட்டுமே நேரடியாக நியமிக்கப்பட வேண்டும். மீதமுள்ளவர்களில் 8 பேர் உதவி கணக்கு அலுவலர்களில் இருந்தும், ஒருவர் உதவி கருவூல அலுவலர்களில் இருந்தும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது உதவி கணக்கு அலுவலர்களும், உதவி கருவூல அலுவலர்களும் கூடுதல் இயக்குனர் நிலை வரை உயர முடியும். ஆனால், அதை விதிகள் அனுமதித்தாலும், அதை செயல்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் மறுப்பதால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.

கருவூலக் கணக்குத் துறையில் இன்றைய நிலையில் மொத்தம் 15 கூடுதல் இயக்குநர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே நேரடியாக கணக்கு அலுவலர் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதும், அவர்களில் ஒருவர் கூட உதவி கணக்கு அலுவலர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போதும் கூட கருவூலக் கணக்குத் துறைக்கு 23 கணக்கு அலுவலர்களை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தியுள்ளது. இவற்றில் 17 பணியிடங்கள் உதவி கணக்கு அலுவலர்களையும், 3 பணியிடங்கள் உதவி கருவூல அலுவலர்களைக் கொண்டும் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த பதவி உயர்வு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், மரபுகளுக்கு மாறாக கருவூலக் கணக்குத் துறை அதிகாரிகள் தேவையின்றி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் சுமார் 40 உதவி கணக்கு அலுவலர்களுக்கு கணக்கு அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படும் போது. பதவி உயர்வு பெற்றவர்கள் தான் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், அவர்களை பணியிட மாற்றம் செய்யாமல், ஏற்கெனவே கணக்கு அலுவலர்களாக இருந்தவர்களை மாற்றம் செய்திருக்கின்றனர். இத்தகைய அநீதிகளை முதலமைச்சரும், நிதியமைச்சரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

கருவூலக் கணக்குத் துறையில் பணி நியமனங்களும், பதவி உயர்வும் மேற்கொள்ளப்படும் போது, அதற்கான விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை தமிழக அரசின் நிதித்துறை உறுதி செய்ய வேண்டும். உதவி கணக்கு அலுவலர் நிலையில் பணியில் சேருபவர்கள் இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர் நிலைக்கு பதவி உயர்வின் மூலம் முன்னேறுவதையும், அதிகாரிகள் தேவையின்றி பணியிட மாற்றம் செய்யப்படாமல் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.