விராட் கோலிக்கு விருது வழங்கி பாராட்டிய ராகுல் ட்ராவிட்!

0
69

விராட் கோலிக்கு விருது வழங்கி பாராட்டிய ராகுல் ட்ராவிட்!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் தொடர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைபற்றியது. அதனை தொடர்ந்து இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன.

அதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும். இதனால் இன்று போட்டி தொடங்குவதற்கு முன்பாக  பிசிசிஐ சார்பில் விராட் கோலிக்கு சிறப்பு அன்பளிப்பு நிகழ்ச்சி மொகாலி மைதானத்தில் நடத்தப்பட்டது.

அதில், விராட் கோலிக்கு ‘கோல்டன் கேப்’ கொடுத்து பாராட்டிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலியின் கடந்த வந்த பாதையை நினைவு கூர்ந்து பாராட்டினார்.

விளையாட்டில் நீங்கள் சிறந்து விளங்குவதற்கான சான்றாக 100-வது டெஸ்ட் போட்டி என்னும் மைல்கல்லை எட்டியுள்ளீர்கள். வியர்வை, ஒழுக்கம், தைரியம், திறமை, உறுதி, ஆசை மற்றும் கவனம் என அனைத்து உங்களிடம் இருந்ததால் தான் உங்களது இந்த  டெஸ்ட் பயணம் மிகச்சிறந்த பயணமாக அமைந்துள்ளது. இந்த பயணத்திற்காக நீங்கள் நிச்சயம் பெருமைப்படலாம் என ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

விருதை பெற்று கொண்ட பிறகு கோலி கூறியதாவது:-

இந்த பயணத்தில் உடனிருந்த குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சக இந்திய அணி வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன். சிறிய வயதில் டிராவிட்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்னும் வீட்டில் வைத்திருக்கிறேன். இப்போது அவரது கையால் 100வது டெஸ்ட் போட்டிக்கான “கோல்டன் கேப்” வாங்கியதில் பெருமைப்படுகிறேன். இது மறக்க முடியாத தருணம் என அவர் தெரிவித்தார்.

author avatar
Parthipan K