நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை! அன்றே சொன்ன கோவை செல்வராஜ்! முன்னாள் அமைச்சர்கள் ரெய்டு பின்னணியில் யார்?

0
77

நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை! அன்றே சொன்ன கோவை செல்வராஜ்! முன்னாள் அமைச்சர்கள் ரெய்டு பின்னணியில் யார்?

திமுக ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக முக்கிய முன்னாள் அமைச்சர்கள் பலர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வரிசையாக ரெய்டு நடத்தியது.

முதலில் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் தொடங்கிய இந்த ரெய்டு எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர் என நீண்டு கொண்டே போனது. அப்போது முதல் இப்போது வரை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது.

 முன்னாள் அமைச்சர்கள்

இந்நிலையில் இடையே இந்த ரெய்டு நடவடிக்கை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த ஜூலை மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் இரண்டாவது முறையாகச் சோதனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்த வாரங்களில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதனையடுத்து வருமானத்திற்கு அதிகமாகக் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 58,44,38,252 ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் காமராஜ் மீது புகார் கூறப்பட்டது.

 ரெய்டு

இப்படி தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் குறிவைக்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 13 இல் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்தது. மேலும், முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமிக்கு பக்க பலமாக இருக்கும் அதிமுகவில் பவுர்புல் தலைவராக உள்ள வேலுமணியின் நெருங்கி நண்பராக அறியப்படும் தொழிலதிபர் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

 அதிமுக விவகாரம்
அதாவது இப்போது ரெய்டு நடக்கும் மற்றும் நடத்தப்பட்ட அனைவரும் உட்கட்சி பிரச்சனையால் பிரிந்து கிடக்கும் அதிமுகவில் எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஆவர். அதிமுகவில் சில காலமாகவே உட்கட்சி பூசல் நிலவுவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இரட்டை தலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். மேலும் அந்த பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர்.
 பரபர குற்றச்சாட்டு

இது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகவே தீர்ப்பு கிடைத்து இருந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளுக்குநாள் இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓபிஎஸ் திமுக உடன் இணைந்து அதிமுகவுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.சமீப காலமாக ஓபிஎஸ் செயல்பாடும் அதை உறுதி செய்வதாகவே இருந்தது.

 மீண்டும் ரெய்டு

இந்தச் சூழலில் தான் இன்று காலை முதலே தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். எல்இடி விளக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்ட புகாரில் வேலுமணிக்குத் தொடர்புடைய 26 இடங்களிலும், மருத்துவக் கல்லூரிக்குச் சட்டத்திற்குப் புறம்பாக ஒப்புதல் அளித்த விவகாரத்தில் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது.

 கோவை செல்வராஜ்

இப்படி எடப்பாடி ஆதரவாளர்கள் ஒவ்வொருவர் மீதும் அடுத்தடுத்து நடக்கும் இந்த ரெய்டால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தச் சூழலில் கடந்த மாதம் இறுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறிய சில கருத்துக்களும் தற்போது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதில் அவர், “நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்து இருந்தார்.

 பின்னணியில் அவரா

அத்துடன் நிற்காமல் கடந்த 4.5 ஆண்டுகளில் எடப்பாடி அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என்றும் வெகு சீக்கிரம் மற்றவர்கள் மீதான ஊழல் பட்டியலையும் வெளியிடுவோம் என்று கூறி அவர் எதிர்தரப்பினரை அதிரச் செய்தார்.

இந்தச் சூழலில் தான் இப்போது இரு முக்கிய முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. இதற்குக் காரணம் ஓபிஎஸ் தான் என எடப்பாடி ஆதரவாளர்கள் இணையத்தில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.