சர்ச்சையில் சசி தரூர் !!!

0
97

சசி தரூர் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். `தி கிரேட் இந்தியன் நாவல்’ என்கிற புத்தகத்தை மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் விடுதலைக்குப் பின் 30 ஆண்டுகளை முன்வைக்கும் நையாண்டி கற்பனைப் படைப்பாக எழுதியிருந்தார்.

1989-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியானது. சசி தரூர், இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதியிருப்பதாகக் கூறி திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சந்தியா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் நீதிமன்றம் சசி தரூரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்று தெரிகிறது. இந்த வழக்கு திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசி தரூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் வழக்கறிஞர் என யாரும் ஆஜராகவில்லை. இதனால், வழக்கை விசாரித்து வந்த திருவனந்தபுரம் நீதிமன்றம் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் சசிதரூர் வெளியிட்டுள்ள  பதிவில், ‘நீதித்துறை மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை. நீதிமன்றம் மூலம் எனக்கு சம்மன்கள் வந்தன. ஆனால், எந்த தேதியில் நான் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு புதிய சம்மன் அனுப்பப்படும் என்று தெரிவித்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறுவோம்’’ என்று தெரிவித்துள்ளார். தனக்கு வந்த சம்மன்களையும் ட்விட்டரில் சசிதரூர் பதிவிட்டுள்ளார்.

இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெறும் எழுத்தாளர்களில் சசி தரூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K