பள்ளிகள் அனைத்தும் செயல்படும் மாணவர்கள் வர வேண்டும் என்ற கட்டாயமில்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!

0
86

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மறுபடியும் செயல்படத் தொடங்கின. அதாவது 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இதுவரையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

அதேபோல ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நேரடி வகுப்புகள் எதுவும் நடக்காமல் இருக்கிறது. நோய் தொற்று குறைந்து வருவதன் காரணமாக, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்கள் எல்லோருக்கும் நேரடி வகுப்புகள் ஆரம்பிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடமும் மற்றும் ஆசிரிய பெருமக்கள் இடமும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த கருத்துகளின் அடிப்படையில் முதலமைச்சர் பள்ளிகளை திறப்பதற்கான முடிவை அறிவிப்பார் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார். மாணவர்களுடைய நலன் தான் முக்கியம் எனவும், அதன் அடிப்படையில் தான் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அடுத்து வரும் ஊரடங்கு அறிவிப்பின் சமயத்தில் ஆரம்பப் பள்ளிகள் போன்றவற்றை திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்சமயம் நடைமுறையிலிருக்கும் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு அல்லது கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்து இருக்கிறார்.

இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படுவது தொடர்பாகவும், வெள்ளி மற்றும் சனி ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்குவது தொடர்பாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு நடுவில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளுக்கு மாணவர்கள் அனைவரும் நிச்சயமாக வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது என கூறியிருக்கிறார். அரசுப் பள்ளிகள் திறந்து இருக்கும் எனவும், பள்ளிகளுக்கு வர விருப்பமிருப்பவர்கள் வருகை தரலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு பள்ளிகளை முழுவதுமாக திறக்காத அதன்காரணமாக, விமர்சனங்கள் வந்தாலும் பரவாயில்லை என்று தெரிவித்திருக்கின்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என தெரிவித்தார். பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு மேற்கொள்வார் என்று அவர் கூறியிருக்கிறார்.