செந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை… 20வது முறையாக காவல் நீட்டிப்பு!

0
173
#image_title

செந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை… 20வது முறையாக காவல் நீட்டிப்பு!

அமலாக்கத்துறை விசாரணையை ஒத்தி வைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அல்லி முன்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் சூழ்நிலைகள் மாறிவிட்டது. செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தி அமைத்துள்ளது. இது குறித்து விசாரணையின் போது தான் நிரூபிக்க முடியும் என வாதிட்டனர்.

இதனை மறுத்து அமலாக்கத்துறை தரப்பில் எந்த டிஜிட்டல் ஆதாரங்களையும் அமலாக்கத்துறை திருத்தவில்லை. அனைத்து ஆவணங்களும் சிறப்பு கோட்டில் இருந்து பெறப்பட்டது தான் எனக் கூறினர்.

மேலும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததை தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்தான் ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாததால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் செந்தில் பாலாஜி செல்வாக்கான நபர் தான் என கூறி செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது என அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து நீதிபதி அல்லி செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றச்சாட்டுகள் பதிவுக்காக நாளை அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதனால் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி மெமோ ஒன்று தாக்கல் செய்வதாகவும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நீதிபதி பின்பு மெமோவை ஏற்றுக் கொள்வதாகவும் அதன் மீது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே அவரது நீதிமன்ற காவலை நாளை ஒரு நாள் மட்டும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக 20 வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

author avatar
Preethi