கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை! வைரலாகும் RTI அதிர்ச்சி தகவல்

0
140

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை! வைரலாகும் RTI அதிர்ச்சி தகவல்

Kendriya Vidyalaya

தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கான ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. ஆனால் 109 இந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் ஆர்டிஐ தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக மத்திய அரசின் சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் மேற்குறிப்பிட்ட பிரிவினர் சேர்ந்தது போல மீது காலி இடங்கள் இருந்தால், அவை பொதுத் தரப்பினருக்கும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க மக்கள் மத்தியில் ஆர்வமும் உருவாகியுள்ளது.

 

நாடு முழுவதும் மொத்தம் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது.

 

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனாலும் இந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாகியுள்ளது.

 

இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள் கட்டாயமா? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்குக் கிடைத்துள்ள பதிலில், 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி, சமஸ்கிருதம் ஆகியவை கட்டாயப் பாடங்கள்’ எனவும் 9ஆம் வகுப்பு முதல் மொத்தமுள்ள 5 பாடங்களில் இந்தியும் சமஸ்கிருதமும் விருப்பப் பாடங்களாக உள்ளதாகவும் பதிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக உள்ளதா? என்ற கேள்விக்கு இல்லை எனவும், தமிழகம் முழுவதும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளதாகவும் இதில் எந்தப் பள்ளியிலும் தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழித் தேர்வில் தேர்சி பெறாமல் 6 ஆம் வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியுமா?’ என்ற கேள்விக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத மொழி பாடத்திற்குப் பதிலாக தமிழைப் பாடமாகப் பயில முடியுமா?’ என்ற கேள்விக்கு முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ள நிலையில், தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது.

 

ஏற்கனவே இந்தி எதிர்ப்பு விவகாரத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் கையிலெடுத்து பூதாகரமாக்கி வரும் நிலையில் இந்த விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட இந்த ஆர்டிஐ தகவல் கடந்த 2021 ஆம் ஆண்டு பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மழலையர் வகுப்புகள் தொடக்கம்

 

இதுவரை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் 2020 புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இதற்கு முன் 5 ஆக இருந்த குறைந்தபட்ச வயது வரம்பு நடப்புக் கல்வி ஆண்டிலிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து,கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘பால்வாடிகா’ என்ற பெயரில், ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. உள்ளிட்ட வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கையும் அண்மையில் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.