பள்ளிகளை மூடினாலும் பழிவாங்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் இத்தனை மாணவர்களுக்கு தொற்று உறுதி?

0
80
Corona virus
Corona virus

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 982- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 668- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குறிப்பாக கொரோனா தொற்றின் தாக்கம் பள்ளிகளில் அதிகரித்து காணப்பட்டதால் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறுவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பள்ளியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மாணவ, மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 11 பள்ளிகள், 2 கல்லூரிகளைச் சேர்ந்த 19 மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. நேற்று கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் 12 பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 11 பள்ளிகலைச் சேர்ந்த 168 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், தஞ்சையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk