தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..

0
102

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூர் என்னும் ஊரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3 தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி லிங்கத்தின் மீது விழுவதும் சிறப்பம்சமாகும்.தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கோபுரத்தில் குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார்.

 

இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக அமைந்துள்ளது.வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறது.இங்கு அம்பாள் சன்னதிக்கு எதிரே நவகிரக சன்னதி இருக்கிறது. அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள்.

 

இத்தலத்தில் ரிஷப தாண்டவ மூர்த்தி நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார்.இங்குள்ள முருகன் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர்.பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.இங்கு துர்க்கை கட்டை விரல் இல்லாமல், சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.

 

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம் ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் மற்றும் ஆயுள் விருத்தி வேண்டுவோர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் முருகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

 

author avatar
Parthipan K