நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது

0
69

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது

என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு பகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த சுரங்க விரிவாக்க பணியில் நிலத்தை கைப்பற்றும் பொழுது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் இயந்திரங்கள் மூலமாக அழிக்கப்பட்டது.

இந்த விரிவாக்கப் பணியை கண்டித்து சில நாட்களாக மக்களும் சில கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்கள் கைப்பற்றப்பட்டதை எதிர்த்தும், என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று (ஜூலை28) காலை பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற பொழுது பாமக கட்சியினர் என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். அப்பொழுது காவல் துறையினருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக கட்சியை சேர்ந்த பலரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் காவல் துறையினரின் வாகனமானது போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருக்கும் காவல்துறை வாகனத்தையும் செல்லவிடாமல் வழியை மறைத்து முற்றுகையிட்டனர்.

இந்த போராட்டத்தின் போது நெய்வேலி காவல்துறை ஆய்வாளரும் பெண் ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.  மேற்கொண்டு போராட்டத்தை நிறுத்த காவல் துறையினர் தடியடி நடத்தினர். மேலும் கலவரக்காரர்கள் மீது தண்ணீரை பாய்ச்சி அடித்தனர். அத்தோடு துப்பாக்கியை கொண்டு வானத்தை நோக்கியும் சுட்டனர். அமைதியாக நடந்த போராட்டம் அடிதடியாக மாறியதால் அந்த பகுதியில் தற்பொழுது பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.