இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

0
85

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

நமது நாட்டில் அடுத்த சில நாட்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் அதிவேகம் எடுத்த கொரோனாவினால் உலக நாடுகளில் கொரோனா பரவல் குறித்த அச்சங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. தற்போது அமெரிக்கா ஜப்பான் தென் கொரியா பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஆங்காங்கே மூன்று நான்கு என்று வந்த தொற்று எண்ணிக்கை தற்போது 39 என எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்திய அரசாங்கமும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்திக் கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு அவர்களோடு தொடர்புடையவர்களையும் கண்காணித்து வருகிறது. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். இவர்களால் இந்தியாவில் மேலும் கொரோனா பரவல் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனை அடுத்து கடந்த கால கோவிட் பரவல் மதிப்பீடு அடிப்படையில் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என ஒன்றிய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஒருவர் பாதிக்கப்பட்டால் 10 முதல் 18 நபர் வரை பாதிக்கக்கூடும் என்பதால் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மற்றொரு அலைக்கு பயந்து சுகாதார வசதிகளின் செயல்பாட்டு தயார் நிலையை கட்டாய மதிப்பாய்வு செய்து வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

சீனா மற்றும் பிற நாடுகளில் கொரோனா கவலை அளிக்கும் வகையில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளதால் நமது நாட்டிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.