மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்! 

0
194
#image_title

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்! 

மயானங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன முறையில் அழகுபடுத்தி பராமரித்தல், தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் பிரியா பேசும்போது கூறியதாவது,

சென்னை மாநகராட்சிக்கு உள்ளடக்கிய  பகுதிகளில், மாநகராட்சிக்கு சொந்தமாக 209 மயான பூமிகள் உள்ளன.இந்த மயான பூமிகளில் உடல்களை எரித்தல் மற்றும் புதைத்தல் உள்ளிட்ட  சேவைகள் சென்னை மாநகராட்சியால் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இலவச சேவையினை சரியாக நடைமுறைப்படுத்துவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். மயான பூமிகளில் சுத்தமாக வைத்துக் கொள்ள தூய்மைப் பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மயான பூமிகளில் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில்  அறிவிப்புப் பலகைகளை மயான பூமிகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் பார்வைக்கு படும்படி வைக்க வேண்டும். இதுபற்றிய தகவல்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். 

மயான பூமியில் நுழைவுப் பகுதியை அழகுபடுத்தி, உட்புறங்களில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.மேலும் பொது மக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். கழிப்பறை பயன்பாடுகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மயானத்தில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தவிர்க்கும் வகையில் அலுவலர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கென  தனி போன் செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும் மயான பூமிகளை எப்போதும் பசுமையாகப் பராமரிக்கும் வண்ணம் மரக்கன்றுகள் நடுதல், நீரூற்றுகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தையும் இந்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆவண செய்ய வேண்டும். இரவு நேரங்களில் ஒரு பாதுகாவலரை நியமித்தல், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும். என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.