மீண்டும் வாலாட்டும் பீட்டா அமைப்பு! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

0
78

ஜல்லிக்கட்டு கம்பாலா உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்து பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதோடு இந்த போட்டிகளுக்கான சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரித்து வருகிறது. இது குறித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்ற வாரம் கோரிக்கை வைத்தது.

ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை கூறிய வழக்குகளை இன்று விசாரணை செய்கிறது. இதற்கு நடுவே இந்த வழக்கில் மனுதாரராக வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவர் ஒண்டிராஜ் இணைக்கப்பட்டுள்ளார்.

இதனை முன்னிட்டு டெல்லி செல்வதற்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டை முடக்க பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்து உள்ளதாக குற்றம் சாட்டினார். ஆகவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு நடுவில் ஜல்லிக்கட்டு விசாரணை குறித்து டெல்லி முகாம் அலுவலகத்தில் மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல் முருகனை சந்தித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மத்திய அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டிய விவாதங்கள் தொடர்பாக கோரிக்கைகளை முன் வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.