தொடங்கியது தமிழக சட்டசபைத் தேர்தல்! வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

0
84

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது அதன்படி தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி ,கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி அதோடு தேமுதிக, அமமுக கூட்டணி 5 முனை போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன் என்று ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி அடையும், யார் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடும் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு ஆரம்பமானது. இதற்காக தமிழ்நாட்டில் பல இடங்களிலும் வாக்காளர்கள் இன்று காலை முதலே வாக்குச்சாவடி நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கிறார்கள். முதல் முறை வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்க இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து இருக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக 6 கோடியே 28,69 955 வாக்காளர்கள் இருக்கிறார்கள் இதில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 ஆன் வாக்காளர்களும் , 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பெண் வாக்காளர்களும், இருக்கிறார்கள். அதேபோல் 7 ஆயிரத்து 192 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கிறார்கள்.

இந்த தேர்தல் களத்தில் 3998 வேட்பாளர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதுமே ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 169 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் போன்றவை சுமார் 91 ஆயிரத்து 180 என்ற அளவில் தயாராக வைக்கப்பட்டு இருக்கின்றன. தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தலா இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

46 ஆயிரத்து 703 வாக்குச்சாவடிகளில் மட்டும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 300 கம்பெனிகளை சார்ந்த 23 ஆயிரத்து 200 துணை ராணுவ படையினர் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை தவிர்த்து 1.58 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதேபோல 88937 வாக்குச்சாவடிகளில் நான்கு லட்சத்து 17 ஆயிரத்து 521 தேர்தல் பணியாளர்களும் பணியில் இருக்கிறார்கள்.