உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும்; அனைத்து கட்சியினரும் கோரிக்கை!

0
76

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் இரவு 7 மணி வரை இருப்பதை மாலை 6 மணியாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர்.

புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் வார்டு வரையறை உள்ளிட்ட காரணங்களால் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இங்கு தேர்தல் நடத்த தற்போது மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடந்தது.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர் பல்வேறு ஆலோசனைகளை கூறி உள்ளனர். குறிப்பாக, 9 மாவட்டங்களிலும் நேர்மையாகவும், நியாயமாகவும், , வெளிப்படை தன்மையுடனும் தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் உறுதுணையாக இருக்கும், அதேநேரம் 9 மாவட்டங்களிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அவற்றில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அதேபோல் ஒரு சில வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை என்பது தேவையில்லை. மாறாக காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மட்டும் போதுமானது என்று கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பின்னர் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு நடப்பில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களைக் கொண்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும்.

கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டவாறு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் அதற்கான ஒத்துழைப்பினை அனைத்து அரசியல் கட்சிகளும் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

author avatar
Parthipan K