திருமணம் செய்ய இருக்கும் புதுமண தம்பதிகள் செய்ய வேண்டியது என்ன?

0
150

திருமணத்தில் மனைவியின் நிறைகளைப்போல் குறைகளையும் சேர்த்தே மணக்கிறீர்கள் என்பதை மனதில் தெளிவாக நிறுத்தி கொள்ளுங்கள்.

 

இதுவரை நீங்கள் பெறுனர். இனி நீங்கள் கொடுனர்.

 

உடன் பிறந்தவர்களுக்கே குண நலன்கள் வேறுபடும். அதனால் கண்டிப்பா அவர்களின் குணநலன்கள் வேறுபடும்.

 

மற்ற குடும்பங்களில் பிறந்தவர்களுக்குக் குண நலன்களும், பழக்க வழக்கங்களும் நிச்சயம் வேறுபடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

அதனால் முதல் நாளிலிருந்தே விட்டுக் கொடுத்து வாழத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

 

தன்னை மாற்றிக் கொள்ளும் மனநிலை இல்லாதவர் மணம்புரிய அடிப்படைத் தகுதி கூட இல்லாதவராக கருதப்படுவர்.

 

உங்களுக்காக உங்கள் துணை மாறவேண்டுமென்று எதிர்பார்த்து முயற்சிப்பதைவிட நீங்களே மாறிக் கொள்வது எளிது.

 

பொறுப்புகள் இல்லாமல் இதுவரை வாழ்ந்தவர் கையில் ஒரு உயிரே கொடுக்கப்படும் மணநாளில் அதைப் பேணுவது உங்கள் தலையாய கடமை.

 

நம்பிக்கையே வாழ்க்கை. ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் நடந்து கொள்ளுங்கள். சந்தேகம் கூடாது. உளவு பார்ப்பதும் கூடாது.

 

திருமணம் என்பது இருவரின் பந்தம் மட்டுமல்ல. இரு குடும்பக்களுக்குமான பந்தம். பந்தம் முறிந்து விடக்கூடாது.

 

ஒருநாள் முழுவதும் உங்களுக்காகவே ஒதுக்கி உங்களை வாழ்த்த வந்த அனைவரின் முன்பும் சிறப்பாக வாழ்ந்து காட்டுவது உங்கள் கடமை.

 

உங்கள் வாழ்வில் பிரச்சினைகள் வந்தால் நீங்கள் சேர்ந்து சிறப்புடன் வாழ அறிவுரை சொல்ல அவர்களுக்குத் தார்மீக உரிமை உள்ளது.

 

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு வருவது சகஜம். முடிந்தவரை நீங்களே தீர்த்துக் கொள்ளுன்கள்.

 

முடியாவிட்டால் பெரியோர், பொறுப்புள்ள நண்பர்கள், ஆலோசகர் உதவியை நாடலாம். அதற்கு மேல் செல்லக் கூடாது.

 

குறையில்லாதவர் யாருமில்லை. தவறுகள் செய்வது மனித இயல்பு. மன்னித்து வாழப் பழகிக் கொள்ளவேண்டும்.

 

மனக் கசப்பு வந்தாலும் அன்றிரவே சமாதானமாகிவிட வேண்டும்.

 

துணையின் குறைகளைத் துணையிடம் சொல்லி புரிய வையுங்கள். நிறைகளை உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள்.

 

திருமணம் உங்கள்மேல் ஏற்றப்படும் நிரந்தர வாழ்வுப் பொறுப்பு. அதைச் சுமையாக்கிக் கொள்வதும், இலகுவாக்கிக் கொள்வதும் உங்கள் கையில்.

 

ஒருவர் பொறுப்பில்லாமல் நடந்தாலும் வாழ்க்கை சுமையாகிவிடும். இருவரும் பகிர்ந்தால் வாழ்க்கை இலகுவாகிவிடும்.

 

அதனால் இது இவரின் வேலை என்று நினைக்காமல் இருவருமே பகிர்ந்து செய்ய வேண்டும்.

 

வரவுக்குள் செலவு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். முதல் செலவே சேமிப்பாக இருக்கட்டும்.

 

பெண்களும் பணி செய்யும் சூழ்நிலையில் இருவரின் பெற்றோரையும் பராமரிக்கும் கடமை இருவருக்கும் உள்ளது.

 

முடிந்தவரை ஆணின் வருவாயில் குடும்பச் செலவுகள் அமைய வேண்டும்.

 

பெண்ணின் வருவாயைப் பக்க வருமானமாகக் கருதி, எதிர்காலச் செலவுகளுக்காக அவர் பெயரிலோ, அல்லது இருவரின் பெயரிலோ சேமிப்பாக வைப்பது அவருக்குப் பெரும் மன நிறைவையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.

 

அனைத்து செலவு, சேமிப்பு, முதலீடு போன்ற முடிவுகளைச் சேர்ந்தே எடுக்க வேண்டும். இழப்புகள் ஏற்பட்டாலும் சேர்ந்தே பொறுப்பேற்க வேண்டும்.

 

பெண்ணுக்குக் குழந்தையைப் பராமரிக்கும் மனநிலை வரும்வரை குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுவது நல்லது.

 

மகிழ்ச்சிக்காகவே மண வாழ்க்கை. வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கிக் கொள்ளுங்கள்.

 

 

author avatar
Kowsalya