வழக்கை எதிர்கொள்ள முடியாமல் வருவாய் துறையை ஏவி விடுவதா? அறநிலையத்துறை மீது புதா அருள்மொழி காட்டம்!!

0
35

மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தது என வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழி கண்டனம்.

சென்னை கிண்டியில் உள்ள பட் சாலையில் அமைந்துள்ள மாநில வன்னியர் சங்க அலுவலகத்தை இன்று காலை வருவாய் துறையினர் முற்றுகையிட்டு அங்கு தங்கி படித்து கொண்டிருந்த மாணவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் இது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று கூறி அங்கிருந்த கொடிக்கம்பம் மற்றும் பெயர் பலகையை அப்புறப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்கள் ஆளும் திமுக அரசு தொடர்ந்து வன்னியர் சமுதாய மக்கள் மீது அராஜக போக்கை கடைபிடித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இந்நிலையில் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில்

இருந்த மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தது என வன்னியர் சங்கத் தலைவர் பு தா அருள்மொழி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை கிண்டியை அடுத்த பட் சாலையில் அமைந்துள்ள மாநில வன்னியர் சங்கக் கட்டிடத்தில் இன்று அதிகாலை காவல்துறை பாதுகாப்புடன் அத்துமீறி நுழைந்த வருவாய்த்துறையினர், அங்கு தங்கி படித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியுள்ளனர். வன்னியர் சங்க அலுவலகத்தில் தங்கி, போட்டித்தேர்வுகளுக்கும், பட்டப்படிப்புக்கும் தயாராகி வந்த மாணவர்களை, எந்த வகையிலும் சம்பந்தப்படாத வருவாய்த்துறை அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

 

சென்னை கிண்டியை அடுத்த பட் சாலையில் வன்னியர் சங்கத்தின் மாநில தலைமை அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. சாதி, மத பேதமின்றி பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு தங்கியிருந்து பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, பட்டயப்படிப்பு ஆகிய படிப்புகளை பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். ஏராளமான மாணவர்கள் அங்கு தங்கி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். பொதுச்சேவை செய்யும் நோக்குடன் அவர்களை அங்கு தங்க வைத்துள்ள வன்னியர் சங்கம், அந்த மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. அவர்களுக்கு சமூக முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில், இன்று அதிகாலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், காவல்துறை காவலுடன் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்திற்கும் நுழைந்த வருவாய்த்துறையினர், அங்கு தங்கி படித்து வந்த மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியுள்ளனர். வன்னியர் சங்கத்தின் பராமரிப்பில் உள்ள கட்டிடத்தில் அத்துமீறி நுழைந்து மாணவர்களை வெளியேற்ற வருவாய்த்துறைக்கு உரிமையில்லை.

 

வன்னியர் சங்க அலுவலகக் கட்டிடமும், அது அமைந்துள்ள நிலமும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 1980-களின் தொடக்கத்திலிருந்தே மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. 1991&ஆம் ஆண்டில் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கோரி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் வன்னியர் சங்கத்தின் வாதங்களைக் கேட்காமல், அந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று 2010-ஆம் ஆண்டில் பூந்தமல்லி கீழமை நீதிமன்றம் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு வழங்கியது.

 

அதனடிப்படையில் அந்த இடத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அறநிலையத்துறை தாக்கல் செய்த மனுவை எதிர்த்து வன்னியர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வன்னியர் சங்கத்தின் வாதத்தை கேட்காமல் தீர்ப்பளித்தது தவறு என்று ஆணையிட்டது. அதை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்றும், அறநிலையத் துறை வழக்கை கீழ்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கடந்த 09.12.2014 அன்று தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் இது குறித்த அறநிலையத்துறை வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போதிலும், அந்த வழக்கை நடத்த இந்து சமய அறநிலையத்துறை எந்த வகையிலும் ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு முறையும் அறநிலையத்துறை வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்கக் கோருவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்த வழக்கு வரும் 28-ஆம் நாள் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் தான், இந்த நிலத்திற்கும், வழக்குக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லாத வருவாய்த்துறை, வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் புகுந்து மாணவர்களை கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளது.

 

வன்னியர் சங்க அலுவலகத்தில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் ஆவர். அவர்களுக்கு வெளியில் தங்கி படிக்க வசதி இல்லாததால் தான், அவர்களுக்கு வன்னியர் சங்கம் இடமும் கொடுத்து, பிற உதவிகளையும் செய்து வருகிறது. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்.

 

நிலத்தின் உரிமை தொடர்பாக வன்னியர் சங்கத்திற்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வருவாய்த்துறையின் இந்த செயல் தவறானது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
Savitha