விரும்பினால் முக கவசத்தை தளர்த்திக் கொள்ளலாம்! இருப்பினும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!!

0
74

விரும்பினால் முக கவசத்தை தளர்த்திக் கொள்ளலாம்! இருப்பினும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27-ஆம் தேதி மருத்துவத்துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு ஊரடங்கில் முக்கிய தளர்வுகள் அளிக்கப்பட்டன.

அந்த வகையில், தமிழகத்தில் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கும் நீக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று, சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்:

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை ஆகியவை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக் கவசம் அணிய கூடாது. முகக் கவசம் அணிவது என்பது சவாலாக இருக்கும் பட்சத்தில் தனி இடத்தில் அதை தளர்த்திக் கொள்ளலாம். அடுத்த இரண்டு வாரம் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. கொரோனா தொற்றுக்கு எதிரான போரில், பொது மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K