அதிமுக செயற்குழு! எடப்பாடிக்கு முழு அதிகாரம்!!

0
176
#image_title

அதிமுக செயற்குழு! எடப்பாடிக்கு முழு அதிகாரம்!!

அதிமுகவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு அக்கட்சியில் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு முழு அதிகாரம் தரும் வகையில் இன்று அதிமுக செயற்குழு உறுப்பினர் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக தலைமை கழகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ ஒப்புதல்கள் அறிவிப்புகள் முடிவுகள் ஆகியவற்றை வெளியிடவும் அறிவிக்கவும் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு செயற்குழு உறுப்பினர்கள் மூலம் முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய அதிமுக செயற்குழு கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்களை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டன.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வரிசையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 3வது அத்தியாயம், மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி அதிமுக மாநில மாநாடு, 2 கோடி புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைத்தல், திமுக ஆட்சியின் அராஜகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அதிமுக ஐடிவிங் நிர்வாகிகள் மீது விடியா திமுக அரசால் போடப்படும் பொய் வழக்குகளுக்கு கண்டனம் தெரிவித்தல், திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பாதுகாக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

தீய சக்தி திமுகவோடு ரகசிய உறவு வைத்துக்கொண்டு கட்சிக்கு துரோகம் செய்து வருபவர்களுக்கு, பொதுச் செயலாளர் தலைமையில் கண்டனம், அதிமுக ஆட்சியின் போது மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்பட்ட நடந்தாய் வாழி காவேரி திட்டம், காவேரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட, மத்திய அரசுக்கு அழுத்தம் தர விடியா திமுக அரசை வலியுறுத்தல்.

இளம் தலைமுறையினரை சீரழிக்கும் நோக்கத்தில், தமிழ் நாட்டில் பெருகிவரும் போதை கலாச்சாரத்தை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துவரும் திமுக அரசுக்கு கடும் கண்டனம், வரவிருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், பொதுச் செயலாளர் தலைமையில் தீவிர களப்பணி ஆற்றி, கழகத்தின் வெற்றிக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட வீரசபதம் ஏற்போம் என பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.